சுட்டெரிக்கும் வெயில்! உங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி? மறக்காம இதை சாப்பிடுங்க
கோடை காலம் வந்துவிட்டாலே உடற் சூடு, சருமப் பிரச்சனைகள் என உடல்நலம் சார்ந்த தொந்தரவுகள் வரிசைகட்டி நிற்கும்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்லும் பட்சத்தில் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்யலாம்?என்னவெல்லாம் செய்யக்கூடாது? என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வெப்பநிலையில் அதிகரிக்கும் போது நம் உடலும் வெப்பத்தை தக்கவைக்க முயற்சிகளை மேற்கொள்ளும், வெளியிலும் வெப்பம் அதிகரித்தால் நம் உடலின் நிலை கடினமானதாக மாறும் போது தலைவலி, வாந்தி, மூச்சு விடுவதில் சிரமம் தொடங்கி பல தொந்தரவுகள் ஏற்படலாம்.
இதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது நீர்ச்சத்தை குறைய விடாமல் பார்த்துக் கொள்வதே.
தண்ணீர் அதிகம் அருந்துவது, தண்ணீர் நிறைந்த பழங்களை உட்கொள்வது, பருத்தி மற்றும் காட்டன் துணியினால் ஆன ஆடைகள், முடிந்தவரை வெளியில் அதிகம் உள்ள நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்த்தல் என முக்கியமான விடயங்களை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்.
எதில் கவனம் தேவை?
வெயில் காலங்களில் சருமப்பிரச்சனைகளை பற்றி சொல்லித் தான் தெரியவேண்டும் என்ற அவசியம் இல்லை.
அம்மை, தோலில் வெடிப்பு, கொப்புளங்கள், தோலில் அரிப்பு என தொந்தரவுகள் இருக்கும். சூரியகதிர்களின் தாக்கம் அதிகம் இருப்பதே இதற்கு காரணம், எனவே நண்பகல் 12 மணிமுதல் மதியம் 3 மணிவரை வெளியே செல்வதை கண்டிப்பாக தவிர்க்கவும்.
நம் உடலிலிருந்து வியர்வை அதிகம் வெளியேறுவதால் தண்ணீர் தேவைப்படும், தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருந்தால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாதல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்சனை, நீர்க்கடுப்பு வரலாம்.
குறிப்பாக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு உப்புச்சத்து குறைவதாலும் பாதிப்புகள் வரலாம், இதனால் சிலருக்கு SunStroke வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.
என்ன செய்யலாம்?
வெளியே செல்லும் போது சூரியஒளி நேரடியாக படாமல் இருப்பதற்கு தொப்பி போன்றவற்றை அணிந்து கொள்ளலாம்.
ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.
வீடுகளில் மண்பானை தண்ணீரை தாராளமாக பயன்படுத்தலாம். அதில் வெட்டிவேர் போன்ற உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியவற்றை போட்டு வைக்கலாம்.
பழச்சாறுகள், இளநீர், மோர் போன்றவற்றை தவறாமல் அருந்தவும்.
நீர்ச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காய், பூசணிக்காய், சுரைக்காய் போன்றவற்றை தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து விடவும், ஏனெனில் இது குடலில் புண்கள் உருவாக வழிவகுத்துவிடும்.
உடற்சூட்டை தணிக்கும் பானங்கள்
கற்றாழை ஜூஸ்
சிறிய சிறிய கற்றாழை துண்டுகளை எடுத்துக்கொண்டு நன்கு சுத்தம் செய்யவும், இதனை மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுத்துக் கொண்டு தேவையான அளவு எலுமிச்சை சாறு, நீர் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம்.
தர்பூசணி ஜூஸ்
தேவையான அளவு தர்பூசணி துண்டுகளை எடுத்துக் கொண்டு ஜூஸாக்கி கொள்ளவும், இதனுடன் தேங்காய் பால் ஒரு கப், சர்க்கரை சேர்த்து அருந்தினால் ருசியான பானம் தயார்.
நீராகாரம்
முந்தைய நாள் இரவே சாதத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து விடவும், மறுநாள் காலையில் பழைய கஞ்சியுடன், சிறிதளவு புளித்த தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கரைத்துவிட்டு அருந்தினால் போதும், அன்றைய நாளுக்கான புத்துணர்ச்சி கிடைத்துவிடும், இதனுடன் சி்ன்ன வெங்காயமும் சேர்த்துக் கொள்ளலாம்.
நன்னாரி
நன்றாக கழுவி சுத்தம் செய்யப்பட்ட நன்னாரி வேர்களை சுமார் 4 முதல் 6 மணிநேரம் வரை ஊறவைத்துக் கொள்ளவும், இந்த நீரை லேசாக கொதிக்க வைத்து இறக்கிய பின்னர் எலுமிச்சை சாறு, கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.
இதுதவிர பதநீர், மோர், எலுமிச்சை- இஞ்சி சேர்ந்த தண்ணீர் என அருந்துவதும் உடற்சூட்டை தணித்துவிடும்.
குறிப்பு- இரவு தூங்குவதற்கு முன்பாக உள்ளங்காலில் சிறிது நல்லெண்ணெய் விட்டு படுப்பது உடற்சூட்டை தணித்துவிடும்.