மனைவி கண்முன்னே துடிதுடித்து இறந்த கணவன்! என்ன காரணம்? அமைச்சரின் அதிகாரப்பூர்வ அறிக்கை
தமிழகத்தில் கடலூர் அரசு மருத்துவமனையில் மனைவி கண்முன்னே கணவன் துடிதுடித்து உயிரிழந்ததற்கு மாரடைப்பே காரணம் என அமைச்சர் மா.சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம் திட்டக்குடியை சேர்ந்தவர் ராஜா(வயது 49), இவருடைய மனைவி கயல்விழி. ராஜாவுக்கு கொரோனா பாதிப்பால் கடந்த 5ஆம் தேதி மூச்சுத் திணறல் ஏற்பட்டதன் காரணமாக கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த இரண்டு வாரங்களாக ஆக்ஸிஜன் கருவி உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மூச்சுத் திணறல் இருந்த காரணத்தினால் அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதனால் கடந்த சில நாட்களாக அவரது ஆக்ஸிஜன் அளவு ஓரளவு சீராக்கப்பட்டு நன்றாக பேசிவந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதால் அவருடைய மனைவி மட்டுமே அவருடன் இருந்து முழுமையாக கவனித்து வந்தார்.
இந்த சூழலில் வியாழக்கிழமை காலை அவரது மனைவி தனது கணவர் ராஜாவுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு பரபரப்பாக வந்த மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அவரிடம் இருந்த ஆக்ஸிஜனை நீக்கிவிட்டு, அங்கிருந்த ஆக்ஸிஜன் கருவியை அவசர அவசரமாக தரை தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஆக்ஸிஜனை நீக்கியதும் ராஜாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் சத்தமிட்டுள்ளார். பதற்றமடைந்த அவரது மனைவி கயல்விழி, மருத்துவர்களிடம் எதற்காக ஆக்சிஜன் இணைப்பை எடுத்துச் செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார்.
தனது கணவருக்கு மூச்சுத்திணறல்அதிகமாக இருப்பதாகவும் ஆக்சிஜன் இணைப்பை மீண்டும் பொருத்தும்படியும் கெஞ்சியுள்ளார். அதனைப் பொருட்படுத்தாமல் அந்த கருவியைக் மருத்துவமனையின் கீழ் தளத்திற்கு எடுத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், ராஜாவுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்து விட்டார். கணவனின் இழப்பைத்தாங்க முடியாத கயல்விழி, கண்ணீர் விட்டு கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.
இந்த தகவலைக் கேள்விப்பட்டதும் உறவினர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.
அதற்கு சாப்பிடும் போது அவரே தான் ஆக்ஸிஜன் கருவியை நீக்கியதாகவும், கடந்த 15 நாட்களாக அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த ஆக்ஸிஜன் கருவியை எடுத்து விட்டுத் தான் உணவு எடுத்துக்கொண்டு வந்தார் என்றும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மருத்துவர்கள் ஆக்சிஜன் கருவியை முழுமையாக நீக்கியுள்ளனர். இது குறித்து கேள்வி கேட்டபோது மற்றொரு நோயாளிக்கு அவசரத் தேவை ஏற்பட்டதால் இதனை நீக்கியதாகவும், அதுவும் அவர் சாப்பிடும் நேரத்தில் மட்டுமே நீக்கியதாகவும் குறிப்பிட்டனர்.
அவர் சாப்பிட்டு முடிப்பதற்கு முன்னதாக ஆக்சிஜன் கருவி அவர் அருகில் கொண்டு வந்து வைக்கப்பட்டு விட்டதாகவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இதனிடையே, ராஜாவின் இறப்புக்கு காரணம் மருத்துவர் அல்ல என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை காலை ஆய்வு மேற்கொண்ட அவர், இறப்பு குறித்து விசாரணை நடத்தியதில் அவருக்கு வழங்கப்பட்ட ஆக்சிஜனை எடுத்ததால் உயிரிழக்கவில்லை எனத் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார்.
அவருக்கு ஆக்சிஜன் அளவு ஏற்கனவே குறைந்து காணப்பட்ட நிலையில், 80 சதவீத பாதிப்பு இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், அவரது மனைவி உணவு வழங்கிக் கொண்டிருக்கும்போது, மாரடைப்பு ஏற்பட்டதாக மருத்துவ தரப்பினர் விசாரணையில் தெரிய வருவதாகக் குறிப்பிட்டார்.
இதனிடையே, மாரடைப்பு காரணமாகவே ராஜா உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார்.