ஜப்பானில் சுனாமியின்போது காணாமல் போன மனைவியை இன்னமும் கடலுக்குள் தேடிவரும் கணவர்: நெகிழவைக்கும் ஒரு செய்தி
ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி உருவானது.
அந்த சுனாமியின்போது 15,000 பேர் உயிரிழந்தார்கள், 360 பில்லியன் டொலர்கள் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. மணிக்கு 700 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த அலைகள், ஜப்பானுக்குள் 10 கிலோமீற்றர் நிலப்பரப்பை வரை வந்தெட்டின.
அந்த சுனாமியின்போது, தன் மனைவி ஒரு மலையின்மீது அமைந்திருந்த வங்கி ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்ததால் அவருக்கு ஒன்றும் ஆகியிருக்காது என உறுதியாக நம்பிக்கொண்டிருந்தார் Yasuo Takamatsu (64).
ஆனால், அந்த வங்கியில் வேலை செய்தவர்களை வேறொரு கட்டிடத்துக்கு போக அதிகாரிகள் உத்தரவிட, அதன்படி வெளியேறிய அனைவரையும், ஒருவர் தவிர்த்து, சுனாமி அலைகள் வாரிக்கொண்டு சென்றுவிட்டன.
அலைகள் ஓய்ந்தபின், மறுநாள்தான் இந்த செய்தி Yasuoவுக்கு தெரியவந்துள்ளது. அப்போது Yasuo வாழ்ந்த Onagawa பகுதியிலுள்ள 10,000 பேரில் 800க்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தார்கள். அவர்களில் 569 பேரின் உடல்கள் மட்டுமே கிடைத்தன. கிடைக்காத உடல்களில் Yasuoவின் மனைவி Yukoவின் உடலும் ஒன்று.
அப்போதிருந்து, இன்று வரை தன் மனைவியாகிய Yukoவை இன்னமும் ஆழ்கடலுக்குள் நீந்திச் சென்று தேடி வருகிறார் Yasuo.
அவர் அப்படி தேடும்போது, காணாமல் போன பலரது உடல்களும் உடைமைகளும் கிடைத்துள்ளன. ஆனால், Yukoவின் உடலோ, அவர் வைத்திருந்த பொருட்களோ கிடைக்கவில்லை. இருந்தாலும், எனது உடலில் உயிர் இருக்கும் வரை அவளைத் தேடுவேன் என்கிறார் Yasuo.



