நீட்டை பற்றி விஜய் பேசியதில் உடன்பாடில்லை! விருது வாங்கிய மாணவியின் தாய் பேச்சு
விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை என்று விருது வாங்கிய மாணவியின் தாய் பேசியது பேசுபொருளாகியுள்ளது.
நீட் குறித்து விஜய்
தமிழகத்தில் 10 மற்றும் 12 -ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்களை தொகுதி வாரியாக அழைத்து தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் கல்வி விருது வழங்கும் இரண்டாம் கட்ட விழா நேற்று நடைபெற்றது.
அப்போது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசிய நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நீட் தேர்வு குறித்து பேசுகையில், "நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மாணவ-மாணவிகள், கிராமப்புற ஏழை, எளிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
நீட் தேர்வை நான் மூன்று பிரச்சனையாக பார்க்கிறேன்.
1.நீட் தேர்வானது மாநில உரிமைகளுக்கு எதிராக உள்ளது.
2. ஒரே நாடு ஒரே பாடத்திட்டம் ஒரே தேர்வு கல்வி கற்கும் நோக்கத்திற்கு எதிராக உள்ளது.
3. நீட் தேர்வு குளறுபடியால் அதன் மீது இருந்த நம்பகத்தன்மை போய்விட்டது. அதற்கு நிரந்தர விலக்கு வேண்டும்" என்றார்.
மாணவியின் தாய் பேசியது
இந்நிலையில், விஜயின் கையால் விருது வாங்கிய மாணவியின் தாய் அவர் நீட் குறித்து பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கொடுத்த பேட்டியில், "விஜய் கூறியது போல உலகம் மிகப்பெரியது தான். நீட் மட்டும் தான் படிப்பது வாழ்க்கை இல்லை. எத்தனையோ துறைகள் கொட்டி கிடக்கிறது.
யார் 100 சதவீதம் உழைப்பை கொடுக்கிறார்களோ அவர்கள் முன்னேறி வரலாம். நீட் என்ற மாயையை உருவாக்க வேண்டாம். அதையும் தாண்டி நிறைய விடயங்கள் இருக்கிறது. அது யாருக்கும் தெரிவதில்லை.
எனது கணவரும் மருத்துவர் தான். இருந்தாலும் விஜய் நீட்டை பற்றி பேசியதில் எனக்கு உடன்பாடில்லை. எங்களுக்கு நீட் வேண்டும் என்று தான் நினைக்கிறோம்" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |