நான் கறுப்பாக குள்ளமாக இருக்கிறேன்.. அதனால் தான் நீங்கள்! சீமான் புதுவித பிரச்சாரம்
நான் கறுப்பாக குள்ளமாக இருப்பதால் தான் என்னுடைய பேச்சுகளை நீங்கள் கேட்க மாட்டுகிறீர்கள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வரும் 10 -ம் திகதி நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் ஆகிய 3 கட்சிகள் மோதுகின்றன.
அந்த வகையில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
சீமான் பேசியது
சீமான் பிரச்சாரத்தில் பேசுகையில், "நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடாதவர்கள் மீது எனக்கு கோபம் இல்லை, வருத்தம் தான் இருக்கிறது. இந்த மக்களை பார்க்கும் போது பரிதாபமாக இருக்கிறது.
மக்கள் சரியில்லை என்று சொல்லாதீர்கள் என்று என்னுடைய கட்சியினரை பார்த்து நான் சொல்வேன். ஏனென்றால், நாமும் அங்கிருந்து தானே வந்திருக்கிறோம்.
நான் கறுப்பாகவும், குள்ளமாகவும் இருப்பதால் தானே என் பேச்சை நீங்கள் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். இதுவே நான் வெள்ளையாகவும், உயரமாகவும், ஆங்கிலத்தில் பேசினால் எனக்கு வாக்களித்திருப்பீர்கள்.
கறுப்பாக இருக்கும் கரும்பில் இருந்து தான் சர்க்கரை வருகிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மக்களை நாம் விட்டுப்பிடிக்க தான் வேண்டும்.
கத்தரிக்காய் விளைந்து வருவதற்கே 60 நாட்கள் ஆகும்போது, கொள்கையை விதைத்து 60 ஆண்டுகளாக சேர்ந்த குப்பையை வெறும் 5 ஆண்டுகளில் அகற்றுவது சிரமம் தான். எல்லாமே ஒரு நாள் மாறும்.
நான் தமிழன் என்பது மட்டுமே எனது அடையாளம். சாதியை நம்பி ஓட்டு வாங்கும் எவனும் இதை பற்றி பேச மாட்டான். திமுகவை அகற்றாமல் இந்த மண்ணில் நல்ல அரசியல் பிறக்காது" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |