சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் டீ, காபி எடுத்துக் கொள்ளலாமா? எச்சரிக்கை விடுக்கும் ICMR
உணவுக்கு முன்பும் பின்பும் டீ,காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.
கோடை காலமாக இருந்தாலும் சரி, குளிர்காலமாக இருந்தாலும் சரி டீ,காபி அருந்துவதை இந்தியர்கள் பழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு பிடித்த பாணமாகவே டீ,காபி மாறிவிட்டது.
இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆனது தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இணைந்து இந்திய மக்களுக்கான 17 உணவு வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளது.
அதில் , டீ மற்றும் காபி குடிப்பது அளவாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டீ, காபி குறித்த எச்சரிக்கை
டீ மற்றும் காபியில் காஃபின் (caffeine) கலந்திருப்பதால், மத்திய நரம்பு மண்டலத்தையும், உடலியல் சார்புநிலையைத் தூண்டுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக டீ, காபி குடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கூறவில்லை. அதற்கு மாறாக, அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.
அதாவது, ஒரு 150 மி.லி. காய்ச்சிய காபியில் 80-120 மி.கி. காஃபின், இன்ஸ்டன்ட் காபியில் 50-65 மி.கி காஃபின், தேநீரில் 30-65 மி.கி. காஃபின் உள்ளது. ஒரு நாளைக்கு 300 மி.கி காஃபினுக்கு மேல் எடுத்துக் கொள்வது உடல்நலத்திற்கு நல்லதல்ல.
மேலும், உணவு உட்கொள்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ,காபி அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏனென்றால், இதில் இருக்கும் டானின் என்ற பொருள், உணவிலிருந்து எடுத்துக் கொள்ளும் இரும்புச் சத்தின் அளவை குறைக்கக் கூடும்.
அதோடு, பால் கலக்காத தேநீர் குடிப்பதால் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம் என்றும் அளவுக்கு அதிகமாக காபி குடித்தால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதயதுடிப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |