ஐரோப்பா அந்த முடிவெடுத்தால்... அச்சத்தில் கடும் பதிலடி குறித்து எச்சரித்த ட்ரம்ப்
கிரீன்லாந்து விவகாரத்தில், அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க ஐரோப்பிய நாடுகள் தங்கள் பத்திரங்களின் இருப்பை மொத்தமாக விற்பனை செய்யும் முடிவுக்கு வந்தால் பெரும் பழிவாங்கல் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்று டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கருவூலப் பத்திரங்கள்
அப்படி நடந்தால், எங்கள் தரப்பிலிருந்து ஒரு பெரிய பதிலடி இருக்கும், மேலும் அனைத்து சாதகமான அம்சங்களும் எங்களிடமே உள்ளன என நேர்காணல் ஒன்றில் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஐரோப்பிய நாடுகளிடம் அமெரிக்க கருவூலப் பத்திரங்கள் கணிசமான அளவில் இருப்பதனை அவர் ஒப்புக்கொண்டார். ட்ரம்ப் சொந்தமாக்க விரும்பும், கிரீன்லாந்தின் எதிர்காலம் குறித்த பதட்டங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து ட்ரம்ப்பின் இந்தக் கருத்துக்கள் வெளியாகின.
நேட்டோ அமைப்பில் முக்கிய சக்தியாக விளங்கும் அமெரிக்கா, கிரீன்லாந்து தீவை ரஷ்யா அல்லது சீனாவிடமிருந்து பாதுகாக்க வேண்டியிருக்கும் என்பதால், அந்தத் தீவு தங்களுக்குச் சொந்தமாக வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால் அந்தப் பகுதி மீது ரஷ்யாவும் சீனாவும் இதுவரை எந்த உரிமையும் கோரவில்லை. மிக சமீபத்தில், கிரீன்லாந்தைப் பெறுவதற்கான தனது கோரிக்கைக்கு இணங்காத ஐரோப்பிய நாடுகளின் மீது வரிகளை விதிப்பேன் என்று ட்ரம்ப் விடுத்த மிரட்டல்கள் உலகச் சந்தைகளை உலுக்கின.
ஆனால் புதன்கிழமை சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில், கிரீன்லாந்தை வலுக்கட்டாயமாகக் கைப்பற்றும் அச்சுறுத்தல்களில் இருந்து ட்ரம்ப் பின்வாங்கினார், மேலும் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தலையும் கைவிட்டார்.
இதன் பின்னணியில் பொருளாதார சிக்கல் இருப்பதை ட்ரம்ப் உணர்ந்துள்ளார் என்றே கூறப்படுகிறது. தற்போதைக்கு, ஐரோப்பிய நேட்டோ நாடுகள் 2 டிரில்லியன் டொலருக்கும் அதிகமான அமெரிக்கப் பத்திரங்களை வைத்திருப்பதால், இந்தச் சூழ்நிலையில் ஐரோப்பாவிற்குப் பொருளாதார ரீதியான செல்வாக்கு இருப்பதாக சில அரசியல் பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்க அரசாங்கத் தரவுகளின்படி, கனடாவும் இந்த வரிசையில் இணைந்தால், அந்த அழுத்தம் சுமார் 3 டிரில்லியன் டொலராக உயர்கிறது.
மோசமான நிதி நிலைமை
இதனிடையே, புதன்கிழமை அன்று, ஸ்வீடன் ஓய்வூதிய நிதியமான அலெக்டா, தற்போதைய நிர்வாகத்தின் கணிக்க முடியாத தன்மை மற்றும் அதிகரித்து வரும் அமெரிக்கக் கடன் ஆகியவற்றைக் காரணம் காட்டி, கடந்த ஓராண்டில் தனது அமெரிக்க கருவூலப் பத்திரங்களில் பெரும்பகுதியை விற்றுவிட்டதாகத் தெரிவித்தது.
இந்த முடிவை பகிரங்கமாக அறிவித்த இரண்டாவது பெரிய நோர்டிக் நிதியமாக இது மாறியுள்ளது. முன்னதாக, டென்மார்க் நிதியமான Akademiker Pension, செவ்வாயன்று தனது அமெரிக்க கருவூலப் பத்திரங்களை விற்பனை செய்வதாக அறிவித்திருந்தது.

ஆனால், அந்த டென்மார்க் நிதி நிறுவனம் தனது முடிவுக்கும் கிரீன்லாந்து விவகாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், மாறாக அது அமெரிக்க அரசாங்கத்தின் மோசமான நிதி நிலைமையுடன் தொடர்புடையது என்றும் விளக்கமளித்துள்ளது.
இதனிடையே, கிரீன்லாந்து மீதான அமெரிக்காவின் திட்டங்களுக்குப் பதிலடியாக ஐரோப்பிய நாடுகள் கடன்பத்திரங்களை இலக்கு வைக்கிறார்கள் என்ற கருத்தை அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் இந்த வாரம் நிராகரித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |