கொரோனா தொற்று இப்படியே அதிகரித்துக்கொண்டே சென்றால் இதைத்தவிர வேறு வழியில்லை: பிரான்ஸ் எடுக்கவிருக்கும் முடிவு
கொரோனா தொற்று இப்படியே அதிகரித்துக்கொண்டே சென்றால் மூன்றாவது பொதுமுடக்கத்தை அறிவிப்பதைத் தவிர வேறு வழியில்லை என பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
பிரான்சில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குப்பின் கொரோனா மீண்டும் வெடித்துக்கிளம்பலாம் என்ற அச்சம் ஒருபுறமிருக்க, நேற்று தடுப்பூசி போடும் நடவடிக்கை அங்கு தொடங்கிய நிலையில், பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சரான Olivier Veran இதை தெரிவித்தார்.
மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எக்காரணத்தைக் கொண்டும் தவிர்க்கமாட்டோம் என்று கூறிய Olivier Veran, ஆனால், அதற்காக பொதுமுடக்கத்தை அறிவிப்பதாக நாங்கள் முடிவே எடுத்துவிட்டோம் என்று கூறமுடியாது, நிலைமையை கண்ணும் கருத்துமாக கண்காணித்துவருகிறோம் என்றார்.
நாளொன்றிற்கு சுமார் 15,000 பேர் வரை புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருவதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை பதிவுசெய்துள்ளது.
இதற்கிடையில், பிரித்தானியாவில் புதிதாக பரவிவரும் வீரியமிக்க கொரோனா வைரஸ், பிரான்சுக்குள்ளும் நுழைந்துவிட்டது.
லண்டனிலிருந்து பிரான்ஸ் வந்த ஒருவருக்கு புதுவகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமையன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.