உக்ரைனில் தேர்தலை நடத்த தயார்! பாதுகாப்பு வழங்க அமெரிக்கா தயாரா? ஜெலென்ஸ்கி கேள்வி
அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதங்கள் அளித்தால் உக்ரைனில் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைனில் தேர்தலை நடத்த தயார்
அமெரிக்கா மற்றும் பிற முக்கிய சர்வதேச நாடுகள் உக்ரைனில் வாக்களிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான உறுதியை வழங்கினால் தனது அரசு 60 முதல் 90 நாட்களுக்குள் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து நடைபெற்றாலும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தேர்தலை நடத்த வேண்டும் என்று விமர்சித்து இருந்தார்.
இத்தகைய பல்வேறு விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தேர்தல் தொடர்பான இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அரசியலமைப்பு பதவி காலம் கடந்த ஆண்டுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது நாட்டில் போர் நடைபெறுவதால் உக்ரைன் ராணுவச் சட்டம் அமுலில் உள்ளது.
இந்த உக்ரைன் ராணுவச் சட்டம் நாட்டில் தேர்தல் நடத்த தடை செய்கிறது.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி
தேர்தலை நடத்துவது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, “நான் தேர்தலை நடத்த தயாராக இருப்பதாகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்த அமெரிக்கா உதவ வேண்டும் என்றும். தெரிவித்துள்ளார்.

மேலும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இணைந்து தேர்தலின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், நான் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்க முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்த ஜெலென்ஸ்கி, அவற்றை முற்றிலும் பொருத்தமற்றது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் இராணுவ சட்டம் நடைமுறையில் இருந்தாலும், தேர்தலை நடத்துவதற்கான புதிய சட்டத்தை முன்மொழிவதற்கான சட்டங்களை தயாரிக்க நாடாளுமன்றத்தை கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |