ஜேர்மானியரின் போர்டிங் பாஸை மாற்றி பிரித்தானியா செல்ல முயன்ற இலங்கையர்! மும்பையில் கைது
மும்பை விமான நிலையத்தில் இலங்கை மற்றும் ஜேர்மனியைச் சேர்ந்த இருவர் குடியேற்ற மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழர்கள் இருவர் கைது
இந்தியாவில், மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் குடியேற்ற மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் பிரித்தானியாவிற்கு விமானத்தில் செல்வதற்காக ஜேர்மன் பாஸ்போர்ட் வைத்திருப்பவருடன் போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொண்டது கண்டுபுடிக்கப்பட்டது, இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையைச் சேர்ந்த ஜெனார்த்தனன் சசானந்தம் (22) மற்றும் ஜேர்மன் பிரஜையான சந்தோஷ் தங்கரத்தினம் (36) ஆகியோர், பாதுகாப்பு சோதனை மற்றும் குடியேற்றத்தை கடந்து, விமான நிலைய கழிப்பறையில், அவர்களிடமிருந்த காத்மாண்டு மற்றும் லண்டனுக்கான போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொண்டனர்.
போலி முத்திரை
சந்தோஷ் தங்கரத்தினத்தின் பிரித்தானிய கடவுச்சீட்டில் இருந்த புறப்பாடு முத்திரை போலியானது என விமான சேவையின் உதவியாளர் ஒருவர் கவனித்த போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
பாஸ்போர்ட்டில் உள்ள புறப்படும் முத்திரை எண் அவரது போர்டிங் பாஸில் உள்ள முத்திரை எண்ணில் இருந்து வேறுபட்டது.
இது தொடர்பாக அந்த நபரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது, அவர் இலங்கையர் என்றும், அவரது உண்மையான பெயர் ஜெனார்த்தனன் சசானந்தம் என்றும், அவர் செவ்வாய்க்கிழமை லண்டனிலிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பட்டார் என்பதும் தெரியவந்தது.
சிறந்த வேலை வாய்ப்புகளுக்காக பிரித்தானியா செல்ல விரும்புவதாக அவர் குடிவரவு அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொள்ளும் திட்டம்
இதற்காக, ஜேர்மன் கடவுச்சீட்டை வைத்திருக்கும் சந்தோஷ் தங்கரத்தினம் என்ற நபரின் உதவியை அவர் பெற்றுள்ளார். தங்கரத்தினம் குடியேற்றத்தை முடித்துவிட்டு லண்டன் செல்லும் விமானத்திற்கான போர்டிங் பாஸ் பெற்றார். சசானந்தம் காத்மாண்டு செல்லும் விமானத்திற்கான மற்றொரு டிக்கெட்டை வைத்திருந்தார். அவர்கள் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றிக்கொண்டனர், இதன்மூலம் சசானந்தத்திற்கு லண்டன் செல்லும் விமானத்திற்காண போர்டிங் பாஸ் கிடைத்தது.
குடிவரவு அதிகாரி இருவரையும் சஹார் பொலிஸில் ஒப்படைத்து அவர்கள் மீது புகார் பதிவு செய்தார். ஏப்ரல் 9-ஆம் திகதி தாங்கள் ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கியிருந்ததாகவும், அப்போதுதான் அவர்கள் தங்களுடைய போர்டிங் பாஸ்களை மாற்றிக் கொள்வதாகவும் இந்த திட்டத்தை வகுத்ததாகவும் இருவரும் பொலிசாரிடம் தெரிவித்தனர்.
அந்தந்த விமானங்களில் ஏறியதைப் போலவே அவர்கள் கிட்டத்தட்ட வெற்றியடைந்தனர், ஆனால் சசானந்தம் லண்டனை அடைந்த பிறகு பிடிபட்டார், மேலும் செவ்வாயன்று இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
வழக்குப்பதிவு
"அவர்கள் முதலில் எப்படி ஒருவருக்கொருவர் தொடர்பு கொண்டார்கள், இதில் மற்றவர்களின் ஈடுபாடு உள்ளதா என்பது குறித்து எங்களுக்கு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை" என்று அந்த அதிகாரி கூறினார்.
இருவர் மீதும் கிரிமினல் சதி, ஆள்மாறாட்டம் செய்தல், ஏமாற்றுதல் மற்றும் மோசடி செய்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் ஏப்ரல் 15-ம் திகதி வரை பொலிஸ் காவலில் இருப்பார்கள் என தெரியவந்துள்ளது.