இஸ்ரேல் ஈரான் மோதல் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படுத்திய தாக்கம்; சற்று ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் என அச்சம் ஏற்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் விலை சீரடைந்துள்ளதாக சற்றே ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படுத்திய தாக்கம்
இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க, ஹமாஸுக்கு ஆதரவாக ஈரான் ஆதரவு ஆயுதக்குழுக்கள் தாக்குதலில் ஈடுபட, தற்போது ஈரானே நேரடியாக தாக்குதலில் இறங்கியுள்ளது.
விடயம் என்னவென்றால், எங்கோ யாருக்கோ சண்டை என யாரும் கவலைப்படாமல் இருக்கமுடியாது. காரணம், எங்கு போர் வெடித்தாலும் அது உலகின் பொருளாதாரத்தை பாதிக்கும்.
அவ்வகையில், இஸ்ரேல் ஈரான் மோதல் உருவாகி இரண்டே நாட்களில் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு சுமார் 5 சதவிகிதம் அதிகரித்து, 76 டொலர் வரை அதிகரித்தது.
அத்துடன், அது 100 டொலர்கள் வரை எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற அச்சமும் உருவானது.
ஆறுதலளிக்கும் ஒரு செய்தி
இந்நிலையில், இன்றைய நிலவரப்படி எண்ணெய் விலை சீரடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் சற்றே ஆறுதல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் ஈரான் மோதலில், ஈரானுடைய எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் குறிவைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே என சந்தை பகுப்பாய்வு நிபுணர்கள் கூறுகிறார்கள்.
ஏனென்றால், அப்படி ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்படுமானால், அது பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதற்கான வாய்ப்புகள் குறைவு என்கிறார்கள் அவர்கள்.
ஆனாலும், சமீபத்தில் ஊடகவியலாளர்கள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் ஈரானின் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்படுமா என கேள்வி எழுப்பியபோது, நாங்கள் அது குறித்து விவாதித்துக்கொண்டிருக்கிறோம் என அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |