கொரோனா தடுப்பூசி பாஸ் தொடர்பில் பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
பிரான்சில், 3.5 மில்லியன் கொரோனா தடுப்பூசி பாஸ்கள் இன்றுடன் செயலிழப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
தங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்று நன்கு மாதங்களாகியும் ஒருவர் பூஸ்டர் டோஸ் பெறவில்லையானால், அவரது தடுப்பூசி பாஸ் செயலிழந்துவிடும்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற விதி பிப்ரவரி 15ஆம் திகதி அமுலுக்கு வந்தது. ஆனால், மக்கள் பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்வதற்காக அரசு ஒரு வாரம் கூடுதலாக நேரம் கொடுத்தது.
அந்த கூடுதல் காலகட்டம் இன்றுடன் (23.2.2022) முடிவுக்கு வரும் நிலையில், நீங்கள் இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி பெற்று நான்கு மாதங்கள் தாண்டியிருக்கும் பட்சத்தில், இன்னமும் நீங்கள் பூஸ்டர் டோஸ் பெற்றுக்கொள்ளவில்லை என்றால், உங்கள் தடுப்பூசி பாஸ் இனி வேலை செய்யாது.
அப்படி தடுப்பூசி பாஸ் செயலிழந்தவர்களால் இனி உணவகங்கள், மதுபான விடுதிகள், காபி ஷாப்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், விளையாட்டு மைதானங்கள், இரவு விடுதிகள் முதலான இடங்களுக்குச் செல்லமுடியாது. அத்துடன், அவர்கள் நீண்ட தூர ரயில்களில் பயணிக்கவும் முடியாது.
இந்த விதி, சுற்றுலாப்பயணிகளுக்கும் பொருந்தும் என்பதால், பூஸ்டர் டோஸ் பெறாத சுற்றுலாப்பயணிகளும் பாதிக்கப்பட உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.