உயிருடன் திரும்பாமல் போகலாம் - சிறையில் இருந்து இம்ரான் கான் எச்சரிக்கை கடிதம்
Imran Khan Warns He May Not Survive Prison: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான், தனது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் சிறையிலேயே உயிரிழக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ள அவர், தனக்கும் தனது மனைவி புஷ்ரா பீபி-க்கும் உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தானின் உயர்நீதித்துறை தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறையில் இருந்து இம்ரான் கான் கடிதம்
74 வயதான இம்ரான் கான், உச்சநீதிமன்றம், கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் மற்றும் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு தனது வழக்கறிஞர் மூலம் திறந்த கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும் தனக்கு போதுமான மருத்துவ சிகிச்சை வழங்கப்படவில்லை என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
"நான் உயிருடன் திரும்பாமல் போகலாம்"
நீண்டகால தனிமைச் சிறைவாசம் மற்றும் மனிதர்களுடன் இயல்பான தொடர்பு இல்லாதது தனது மனநலனை பாதித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், குடும்பத்தினரை சந்திக்கவும், தனது மனைவியுடன் பேசவும் அனுமதி மறுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த தனிமை வாழ்க்கையால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக இம்ரான் கான் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் தமக்கு மூளையில் ரத்தக்கசிவு மற்றும் மாரடைப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளதாகவும், தனது இதயம் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த நிலை தொடர்ந்தால் நான் உயிருடன் திரும்பாமல் போகலாம்” என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், கடந்த வாரம் இம்ரான் கான் கண் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், அவரது உடல்நிலைக்கு உரிய சிகிச்சை தொடர்ந்து வழங்கப்படவில்லை என்று அவரது தரப்பு வலியுறுத்துகிறது. மேலும், அவரது மனைவி புஷ்ரா பீபியின் பார்வைத்திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார். கண் அறுவை சிகிச்சைக்குப் பிறகும் தேவையான மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போது, இம்ரான் கான் மற்றும் புஷ்ரா பீபி இருவரும் தொஷாகானா-2 ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன என்று அவரது கட்சியான பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தொடர்ந்து கூறி வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |