வரலாற்றில் முதல் முறையாக... வட கொரியா தொடர்பில் தென் கொரிய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி
நீண்ட காலமாக தடை விதிக்கப்பட்டிருந்த வட கொரியாவின் முதன்மையான நாளேட்டை தென் கொரிய மக்கள் அணுகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தேசிய பாதுகாப்புத் தடை
வட கொரியாவுடன் சமாதானப் போக்கைக் கொண்ட ஜனாதிபதி லீ ஜே மியுங்கின் நிர்வாகம் முன்னெடுத்த சமீபத்திய சமரச முயற்சி இதுவென்றே கூறப்படுகிறது.

இருப்பினும், தென் கொரியா தனது அணு ஆயுதம் தாங்கிய அண்டை நாடான வட கொரியாவுடன் உத்தியோகப்பூர்வமாகப் போரில் ஈடுபட்டுள்ளது, மேலும் வட கொரியாவின் பரப்புரைகள் மீதான பல தசாப்த கால தேசிய பாதுகாப்புத் தடை இன்னும் நடைமுறையில் உள்ளது.
ஆனால், தென் கொரிய மக்கள் இதுபோன்ற விடயங்களை மதிப்பிடுவதற்கு அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்தவர்கள் என்று ஜனாதிபதி லீ உள்ளிட்ட விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மேலும், உலகின் மேம்பட்ட இணைய வசதி கொண்ட மற்றும் கல்வி அறிவு பெற்ற நாடுகளில் ஒன்றான ஒரு துடிப்பான ஜனநாயக நாட்டில், இந்தத் தடை தேவையற்ற தணிக்கைக்கு ஒப்பானது என்றும் விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
இதனிடையே, தென் கொரிய அரசாங்கம் வெள்ளிக்கிழமை அன்று ஒரு பல்துறை முகமையின் கூட்டத்தைக் கூட்டி, ரோடாங் சின்முன் நாளேட்டை பொது மக்கள் அணுகும் வகையில் மறுவகைப்படுத்துவது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒருமித்த கருத்து இருப்பதை உறுதி செய்தது.

பொதுமக்கள் அணுக
அத்துடன், இந்த வார தொடக்கத்தில் தேவையான நிர்வாக நடைமுறைகள் மூலம் இது செயல்படுத்தப்படும் என்றும் அரசாங்கம் சார்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வட கொரியாவின் சில பரப்புரைகளைப் பொதுமக்கள் அணுகுவதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக சியோலின் ஒருங்கிணைப்பு அமைச்சகம் கடந்த வாரம் ஜனாதிபதி லீயிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், பொதுமக்கள் வட கொரியாவின் கருத்துக்களுக்கு மயங்கி கம்யூனிஸ்டுகளாக மாறிவிடுவார்கள் என்ற அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்றே லீ அப்போது கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |