இந்தியா - பாகிஸ்தான் மோதிய அனல் பறந்த 6 ஆசிய போட்டிகள்: கோஹ்லி அடித்த 183 ரன்
ஆசியக் கிண்ணத் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய மறக்க முடியாத போட்டிகள் குறித்து இங்கே காண்போம்.
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி என்றாலே உலக கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும்.
அந்த வகையில் நடப்பு ஆசியக் கிண்ணத் தொடரின் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
திரில் வெற்றி
2010யில் தம்புள்ளையில் நடந்த ஆசியக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தான் அணி 268 ஓட்டங்களை வெற்றி இலக்காக இந்தியாவுக்கு நிர்ணயித்தது.
பரபரப்பாக நடந்த அந்த போட்டியின் கடைசி ஓவரில் இந்திய அணி திரில் வெற்றி பெற்றது. முகமது ஆமீர் வீசிய அந்த ஓவரில் ஹர்பஜன் சிங் 5வது பந்தில் சிக்ஸர் அடிக்க மைதானமே அதிர்ந்தது.
ஷாகித் அப்ரிடியின் சிக்ஸர்
2014ஆம் ஆண்டில் நடந்த போட்டியில் இந்திய அணி 245 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி இலக்கை நெருங்கும்போது விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
எனினும், அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி கடைசி ஓவரில் வெற்றி பெற வைத்தார். அஸ்வின் வீசிய அந்த ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட, அப்ரிடி அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாச பாகிஸ்தான் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்தியா இமாலய வெற்றி
2023யில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டிதான் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.
விராட் கோஹ்லி (122), கேஎல் ராகுல் (111) இருவரும் சதம் விளாச இந்தியா 356 ஓட்டங்கள் குவித்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் 128 ஓட்டங்களுக்கு சுருண்டதால், இந்தியா 228 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரித்த வெற்றி பெற்றது. குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சரவெடி ஹர்திக் பாண்டியா
2022யில் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த டி20 ஆசியக் கிண்ணப் போட்டி இந்திய அணி மற்றொரு திரில்லர் வெற்றியாகும்.
இப்போட்டியில் பாகிஸ்தான் 147 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அடுத்து ஆடிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) சரவெடியாக 17 பந்துகளில் 33 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் இந்தியா கடைசி ஓவரில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹர்திக் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
கோஹ்லியின் வேட்டை
பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோஹ்லி சம்பவம் செய்த போட்டி என்றால், 2012ஆம் ஆண்டில் மோதிய ஆசியக் கிண்ணம்தான்.
அப்போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 329 ஓட்டங்கள் குவித்தது. நசீர் 112 ஓட்டங்களும், ஹபீஸ் 105 ஓட்டங்களும் குவித்தனர். பின்னர் இமாலய இலக்கை நோக்கிய களமிறங்கிய இந்திய அணியில் கம்பீர் டக்அவுட் ஆக, மைதானத்தில் குழுமியிருந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின் வந்த விராட் கோஹ்லி (Virat Kohli) அனுபவ வீரர் சச்சின் டெண்டுல்கருடன் கைகோர்த்தார். சச்சின் 52 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து ரோஹித் ஷர்மா இறங்கி நிதானமாக ஆட, கோஹ்லி சரவெடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவர் 148 பந்துகளில் 183 ஓட்டங்களும், ரோஹித் 68 ஓட்டங்களும் விளாச, இந்தியா 47.5 ஓவரிலேயே 330 ஓட்டங்கள் குவித்து திரில் வெற்றி பெற்றது.
கோஹ்லியின் மிரட்டல்
2016யில் ஒற்றை வீரராக கோஹ்லி இந்திய அணியை காப்பாற்றினார். முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 83 ஓட்டங்களுக்கு சுருண்டது.
ஆனால், பந்துவீச்சில் ஆமிர் (Amir) தாக்குதல் நடத்த ரஹானே, ரோஹித் டக்அவுட் ஆக, ரெய்னா ஒரு ரன்னில் அவுட் ஆனார். இந்திய அணி 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகள் என மோசமான நிலையில் இருந்தபோது, விராட் கோஹ்லி பொறுப்பாக ஆடி 49 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் யுவராஜ் சிங் 14 ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 15.3 ஓவரில் 85 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |