அமெரிக்காவிற்கான தபால் சேவையை ரத்து செய்த இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் - என்ன காரணம்?
இந்தியா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவிற்கான தபால் சேவையை ரத்து செய்வதாக அறிவித்துள்ளன.
சுங்கவரி விலக்கை ரத்து செய்த அமெரிக்கா
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இதனைத்தொடர்ந்து, அஞ்சல் சேவைக்கான சுங்கக்கட்டண வரி விலக்கையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
முன்னதாக அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் 800 டொலர்களுக்கு குறைவான பார்சல்களுக்கு சுங்கவரி விலக்கு வழங்கப்பட்டிருந்தது.
இனி அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் அனைத்து பொருட்களுக்கும், அதன் மதிப்பை பொருட்படுத்தாமல் சுங்க வரி இருக்கும். அதேவேளையில், 100 டொலர்களுக்கு குறைவான பொருட்களுக்கு சுங்கவரி விலக்கு வழங்கப்படுகிறது.
இதன் காரணமாக, அமெரிக்காவிற்கு செல்லும் சரக்கு விமானங்கள் பொருட்களை கொண்டு செல்ல முடியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
ரத்து செய்த இந்தியா
இதனை கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல், கடிதங்கள், ஆவணங்கள் உள்ளிட்ட 100 அமெரிக்க டொலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர, அமெரிக்காவிற்கான தபால் சேவையை தற்காலிகமாக ரத்து செய்வதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.
ஏற்கனவே பார்சல்களை அனுப்ப முன்பதிவு செய்தவர்கள், அஞ்சல் தொகையை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள்
ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் பார்சல் சேவையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.
மேலும், திங்கட்கிழமை முதல் ஆஸ்திரியாவும், செவ்வாய்க்கிழமை முதல் பிரித்தானியவும் பார்சல் சேவையை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 29 ஆம் திகதிக்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், அனைத்து உறுப்பினர்களும் பார்சல் சேவையை ரத்து செய்வார்கள் என 51 ஐரோப்பிய பொது அஞ்சல் ஆபரேட்டர்களின் சங்கமான போஸ்ட் யூரோப் அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |