இந்தியாவை நோக்கி வந்த கப்பலை சிறை பிடித்த ஈரான்
இந்தியாவை நோக்கி வந்த கப்பலை ஈரான் சிறை பிடித்ததுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான 2 வார தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வர இருந்த நிலையில், போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஆனால் ஹார்மோஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடரும் என அறிவித்துள்ளார்.
நேரடியாக தாக்குதல் நடத்தாமல், ஹார்மோஸ் வழியாக வெளியேறும் ஈரான் கப்பல்களை தடுத்து, ஈரானின் பொருளாதாரதத்தை முடக்கும் முயற்சியில் ட்ரம்ப் இறங்கியுள்ளார்.
ஆனால் ஹார்மோஸ் மீதான முற்றுகையை நீக்கினால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என ஈரான் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஹார்மோஸ் ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளதை காட்டும் வகையில், அங்குள்ள கப்பல்கள் மீது ஈரானின் IRGC பிரிவு தாக்குதலை தொடங்கியுள்ளது.
போர் நிறுத்த நீட்டிப்பு அறிவிப்பு வெளியான பின்னர் ஓமன் அருகே ஒரு கொள்கலன் கப்பல், UAEவை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்குச் சொந்தமான பனாமா கொடியை ஏந்திய 'யூஃபோரியா' என்ற கப்பல், பனாமா கொடியை ஏந்திய எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா கப்பல் ஆகிய 3 கப்பல்கள் மீது IGRC கடற்பிரிவு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

இந்தியாவை நோக்கி வந்த கப்பல் சிறைபிடிப்பு
மேலும் எச்சரிக்கையை மீறி ஹார்மோஸ் நீரிணையை கடக்க முயன்ற எம்.எஸ்.சி-ஃபிரான்செஸ்கா மற்றும் எபாமினோண்டஸ் இரு கப்பல்களை IRGC சிறைபிடித்துள்ளது.
இதில், லைபீரியாவின் கொடியின் கீழ் பயணிக்கும் ஒரு கொள்கலன் கப்பலான எபாமினோண்டஸ், துபாயில் உள்ள ஜெபல் அலியிலிருந்து குஜராத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

"தேவையான அனுமதிகள் இல்லாமல் இயங்கியும், வழிசெலுத்தல் அமைப்புகளில் முறைகேடு செய்தும் கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய, 2 விதிமீறல் கப்பல்கள், IRGC கடற்படையால் கைப்பற்றப்பட்டு ஈரான் கடற்கரைக்கு அனுப்பப்பட்டன" என IRGC வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த வார தொடக்கத்தில், இந்தியாவிற்கு சொந்தமான கப்பல்கள் மீது IRGC துப்பாக்கி சூடு நடத்தியது.அதற்கு ஈரான் தூதரை இந்திய வெளியுறவு அமைச்சகம் அழைத்து கண்டனம் தெரிவித்தது.
தற்போது, இந்தியாவிற்கு வரவிருந்த கப்பலை சிறைப்பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |