எண்ணெய் மட்டுமல்ல... ரஷ்யாவிடமிருந்து இந்தப் பொருளை அதிக அளவில் வாங்கும் இந்தியா
ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெய் மட்டுமின்றி இந்தியா அதிக அளவில் வாங்கும் இன்னொரு பொருளும் உள்ளது.
இந்தியாவும் தைவானும்
இந்தியா தற்போது ரஷ்யாவிலிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயை அதிக அளவில் வாங்குகிறது. எண்ணெய் மட்டுமின்றி, நாப்தா என்ற திரவ ஹைட்ரோகார்பன் கலவையும் ரஷ்யாவில் இருந்து இந்தியாவால் அதிக அளவில் வாங்கப்படுகிறது.
ஜூன் மாதத்தில், ரஷ்யாவிலிருந்து நாப்தாவை அதிக அளவில் வாங்கிய நாடுகளில் இந்தியாவும் தைவானும் இடம்பெற்றுள்ளன. பெட்ரோ கெமிக்கல் துறையில் நாப்தா ஒரு அத்தியாவசியப் பொருளாகும்.
ஓலிஃபின்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் அதிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. அவற்றிலிருந்து பிளாஸ்டிக், செயற்கை ரெசின்கள், செயற்கை இழைகள் மற்றும் பல வகையான இரசாயனங்கள் தயாரிக்கப்படுகின்றன.
பிப்ரவரி 2023ல், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் பொருட்களை முற்றிலுமாக தடை செய்தது. இதனையடுத்து மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து நாப்தாவை வாங்கத் தொடங்கின.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஜூன் மாதத்தில் மட்டும் ரஷ்ய துறைமுகங்களில் இருந்து 250,000 டன் நாப்தா இந்தியாவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் மே மாதத்தை ஒப்பிடுகையில், இது 5 சதவீதம் குறைவு என்றே கூறப்படுகிறது.
ரஷ்ய நாப்தா
இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், இந்தியா ரஷ்யாவிலிருந்து 1.4 மில்லியன் டன்களுக்கும் அதிகமான நாப்தாவை வாங்கியுள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில், இந்தியாவின் மேற்கு துறைமுகங்களான முந்த்ரா, ஹசிரா மற்றும் சிக்காவில் ரஷ்ய நாப்தா வந்தடைந்துள்ளது.
முன்னர் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்தே தேவையான நாப்தாவை இந்தியா இறக்குமதி செய்து வந்துள்ளது. ஆனால் தற்போது குறைந்த செலவில் மலிவு விலையில் ரஷ்யாவில் இருந்து நாப்தாவை இறக்குமதி செய்கிறது.
ஜூன் மாதத்தில் ரஷ்யாவிலிருந்து தைவானுக்கு 234,000 டன் நாப்தா ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இது மே மாதத்தில் இருந்ததை விட இரு மடங்காகும். ஜனவரி முதல் ஜூன் வரை, தைவான் ரஷ்யாவிலிருந்து 12.7 லட்சம் டன் நாப்தாவை இறக்குமதி செய்துள்ளது.
ஜூன் மாதத்தில் ரஷ்ய நாப்தாவை வாங்கிய முக்கிய நாடுகளில் சிங்கப்பூர், மலேசியா, துருக்கி மற்றும் சீனாவும் அடங்கும். ஜூன் மாதத்தில் ரஷ்யாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் நாப்தா இறக்குமதி செய்துகொள்ளவில்லை.
ஆனால் மே மாதத்தில் 80,000 டன் நாப்தா இறக்குமதி செய்துள்ளது. மட்டுமின்றி, சுமார் 300,000 டன் ரஷ்ய நாப்தாவை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப் ஆஃப் குட் ஹோப் வழியாக ஆசியாவிற்கு செல்கின்றன என கப்பல் போக்குவரத்தைக் கண்காணிக்கும் தரவுகள் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |