போர் நிறுத்த விவகாரத்தில் டிரம்ப் சொல்வது பொய் - மறுப்பு தெரிவித்துள்ள இந்தியா
போர் நிறுத்தம் தொடர்பான டிரம்ப்பின் கருத்தை இந்தியா மறுத்துள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்
பஹல்காம் தாக்குதலுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் நேற்று தாக்கியழித்துள்ளது.
இதனையடுத்து, இரு நாடுகளுக்குமிடையே போர் நிலவும் சூழல் ஏற்பட்டது. இரு நாடுகளும் ட்ரோன் மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், மே 10 ஆம் திகதி இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா அதிபர் டொனால்ட் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இதனையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இருந்து போர் நிறுத்தம் செய்வதாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.
டிரம்ப்பின் அறிவிப்பு
மேலும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் அறிவித்தார்.
டிரம்ப்பின் அறிவிப்புக்கு பின்னர், போர் நிறுத்தம் மகிழ்ச்சியான முடிவு என்றாலும், இதில் அமெரிக்காவின் தலையீடு இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இந்நிலையில், போரை நிறுத்தாவிட்டால், இரு நாடுகளிடமும் வர்த்தகம் செய்ய மாட்டேன் என கூறினேன். இதன் காரணமாகவே இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன என டிரம்ப் நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து, ஆபரேஷன் சிந்தூரருக்கு பின்னர், முதல்முறையாக பொதுமக்களிடம் உரையாற்றிய இந்திய பிரதமர் மோடி, டிரம்ப்பின் இந்த கருத்து தொடர்பாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
வர்த்தக பேச்சே எழவில்லை
இந்நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளார்.
டிரம்ப்பின் கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், "காஷ்மீர் தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் பாகிஸ்தானுடன் இருதரப்பு ரீதியாக மட்டுமே விவாதிக்கப்படும் என்பது இந்தியாவின் நீண்டகால கொள்கை.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கப்படுவது மட்டுமே நிலுவையில் உள்ள ஒரே பிரச்சினை.
பாகிஸ்தான் தளங்கள் மீது இந்திய விமானப்படை நடத்திய தாக்குதல்கள் காரணமாக மட்டுமே போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் முன்மொழிந்தது.
ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதில் இருந்து இந்தியாவின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க மற்றும் இந்திய தலைவர்கள் இடையே அவ்வப்போது உரையாடல் நடந்தது. ஆனால் அவற்றில் வர்த்தகம் தொடர்பான பேச்சே எழவில்லை" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |