உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு இந்தியா நிதியுதவி: வெள்ளை மாளிகை அதிகாரி குற்றச்சாட்டு
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைனில் ரஷ்யாவின் போருக்கு இந்தியா தாராளமாக நிதியளிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உயர்மட்ட உதவியாளர் ஒருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
நிதியளிப்பதை ஏற்க முடியாது
ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு இந்தியா மீது ஜனாதிபதி ட்ரம்ப் அழுத்தத்தை அதிகரித்துவரும் நிலையிலேயே வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவரும் தற்போது ரஷ்ய போருக்கு இந்தியா உதவுவதாக சாடியுள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தப் போருக்கு இந்தியா தொடர்ந்து நிதியளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ட்ரம்ப் மிகத் தெளிவாகக் கூறியுள்ளார் என வெள்ளை மாளிகையின் துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்பிடம் செல்வாக்கு மிகுந்த அதிகாரிகளில் ஸ்டீபன் மில்லரும் ஒருவர். மட்டுமின்றி, இந்தோ-பசிபிக் பகுதியில் அமெரிக்காவின் முக்கிய பங்காளிகளில் ஒன்றான இந்தியாவைப் பற்றி ட்ரம்ப் நிர்வாகம் இதுவரை கூறிய விமர்சனங்களில் மில்லரின் விமர்சனம் மிகவும் அழுத்தமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
அத்துடன், ரஷ்ய எண்ணெய் வாங்குவதில் இந்தியா சீனாவுடன் ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்பதை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைவார்கள். அது ஒரு வியக்கவைக்கும் உண்மை என்றும் மில்லர் ஃபாக்ஸ் நியூஸில் பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா தொடரும் என்றே இந்திய அரசாங்க வட்டாரங்கள் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
இறக்குமதிகளுக்கு 100 சதவீத வரி
ரஷ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்கள், மற்றும் எண்ணெய் வாங்குவதன் விளைவாக, இந்தியப் பொருட்களுக்கு ட்ரம்ப் நிர்வாகம் விதித்த 25 சதவீத வரி வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வந்தது.
மட்டுமின்றி, உக்ரைனுடன் ரஷ்யா ஒரு நீண்ட கால சமாதான ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளிலிருந்து அமெரிக்க இறக்குமதிகளுக்கு 100 சதவீத வரிகளை விதிக்கப்போவதாகவும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான ட்ரம்பின் உறவைக் குறிப்பிட்டு மில்லர் தனது விமர்சனத்தைத் தணித்தார், மேலும் அவர்கள் இருவரின் உறவு என்பது உயர்வானது என்றும் விவரித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |