இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் துவக்கம் - கட்டணம் எவ்வளவு? எந்த வழித்தடம்?
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜூலை 17 ஆம் திகதி முதல் இயக்கப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்
இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலை வரும் ஜூலை 17 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சோதனை ஓட்டமாக வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில் 89 கி.மீ நீளமுள்ள ஹரியானாவின் ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் முதல்கட்டமாக இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலில், 682 இருக்கைகள் உள்ள நிலையில், மொத்தமாக சுமார் 2,600 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும்.
இதன் டிக்கெட் விலைகள் ரூ.5 முதல் ரூ.25 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ரயில் அதிகபட்ச பயணிகள் சுமை மற்றும் இயக்க நிலைமைகளின் கீழ், ஒரு நாளைக்கு சுமார் 300 கிலோ ஹைட்ரஜனைப் பயன்படுத்தும். இந்த ரயில் மணிக்கு அதிகபட்சம் 110 கி.மீ வேகத்தை எட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்படி செயல்படும்?
இது வழக்கமான டீசல் ரயில்களைப் போலல்லாமல், 1,200 கிலோவாட் ஹைட்ரஜன் எரிபொருள் செல் உந்துவிசை அமைப்பால் இயக்கப்படுகிறது.

டீசலை எரிப்பதற்குப் பதிலாக, ரயிலில் சேமிக்கப்பட்ட ஹைட்ரஜன், எரிபொருள் செல்லுக்குள் இருக்கும் ஆக்ஸிஜனுடன் வினைபுரிந்து மின்சாரத்தை உருவாக்குகிறது. இந்த மின்சாரம் ரயிலின் மோட்டார்களை இயக்குகிறது.
இதனால் இது கார்பனை வெளியேற்றாமல், நீராவியை மட்டும் வெளியிடுவதால் சுற்றுசூழலுக்கு உகந்ததாக உள்ளதோடு, புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கிறது.
ஹைட்ரஜன் கசிவு மற்றும் தீப்பிழம்பு கண்டறியும் கருவிகள் உள்ளிட்ட சிறப்புப் பாதுகாப்பு அமைப்புகளையும் நிறுவப்பட்டுள்ளது. பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக இவை தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
இதற்காக ஜிந்தில் ஹைட்ரஜன் சேமிப்பு மற்றும் எரிபொருள் நிரப்பும் வசதி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் நம்பகமானதாகவும், வணிக ரீதியாக சாத்தியமானதாகவும் இருந்தால் இதனை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த முன்னெடுப்பின் மூலம், தூய்மையான ரயில் போக்குவரத்திற்காக ஹைட்ரஜனைப் பயன்படுத்துவதை ஆராய்ந்து வரும் ஜெர்மனி, ஜப்பான், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |