ட்ரம்பின் நெருக்கடிக்கு பணிந்த இந்தியா... ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை நிறுத்த முடிவு
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தக்கூடும் என்ற செய்திகளை வரவேற்ற ட்ரம்ப், இது ஒரு நல்ல நடவடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
நல்ல நடவடிக்கை
வரி விதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் தொடர்பு கொள்ள திட்டமிட்டிருந்தாரா என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள ட்ரம்ப், இந்தியா இனி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப் போவதில்லை என நான் கேள்விப்பட்டேன். அது உண்மையா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை. உண்மை என்றால் அது ஒரு நல்ல நடவடிக்கை என குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்யாவின் வருவாயை கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்ய எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு ட்ரம்ப் அழுத்தம் அளித்திருந்தார்.
உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, 2022 ஆம் ஆண்டில் ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் தடைகள் விதிக்கப்பட்டதிலிருந்து, தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்கும் முக்கிய நாடாக இருந்து வருகிறது.
இருப்பினும், சலுகைகள் குறைந்து கப்பல் போக்குவரத்து சவால்கள் அதிகரிப்பதால் இந்திய அரசு சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் கொள்முதலை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை சாடினார்
ஆனால் இப்படியான ஒரு நகர்வு குறித்து இந்திய அரசாங்கம் இதுவரை உறுதி செய்யவில்லை. கடந்த ஒரு வார காலமாக இந்தியாவை நெருக்கடிக்கு உள்ளாக்கும் விமர்சனங்களை ட்ரம்ப் முன்வைத்து வந்துள்ளார்.
ரஷ்ய எண்ணெய் மற்றும் இராணுவ உபகரணங்களை தொடர்ந்து வாங்கும் அதே வேளையில், அதிக வரிகளையும் ஏற்க முடியாத வர்த்தக தடைகளையும் பராமரிப்பதற்காக இந்தியாவை அவர் கடுமையாக சாடினார்.
ரஷ்யாவுடனான இந்தியாவின் தொடர்ச்சியான எண்ணெய் வர்த்தகத்திற்கு குறிப்பிடப்படாத அபராதம் உட்பட, அமெரிக்காவிற்கான அனைத்து இந்திய ஏற்றுமதிகளுக்கும் 25 சதவீத வரி விதித்து அமெரிக்கா சமீபத்தில் அறிவித்தது. ஆனால் ரஷ்யா உடனான நீண்ட கால உறவை கைவிட முடியாது என்றே இந்தியா பதிலளித்திருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |