கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறதா இந்தியா: ரஷ்யா அரசு தெரிவித்த பதில்
கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தம் தொடர்பில் ரஷ்யாவிற்கு இந்தியா எந்தவொரு அறிக்கையையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் கொள்முதல் நிறுத்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்த இந்தியா சம்மதம் தெரிவித்து இருப்பதாக அறிவித்தார்.
அத்துடன் இனி இந்தியாவின் பெரும்பாலான கச்சா எண்ணெய் கொள்முதல் நாடாக அமெரிக்கா மற்றும் வெனிசுலா இருக்கும் என்றும் அறிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் முக்கிய அம்சமாக, இந்தியாவின் மீது விதிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பை 25% இருந்து 18% ஆக குறைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.
டிரம்பின் இந்த வரி குறைப்பு நடவடிக்கைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி X தளத்தில் நேற்றிரவு நன்றி தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் பதில்
இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதலை நிறுத்திக் கொள்வது குறித்து இந்தியா இதுவரை எந்தவொரு அறிக்கையையும் வழங்கவில்லை என்று அந்நாட்டின் தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தகவல் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவுடன் ரஷ்யா அனைத்து சாதகமான வழிகளிலும் உறவை மேம்படுத்தவே விரும்புவதாகவும் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
2021ம் ஆண்டு வரை இந்தியா ரஷ்யாவிடம் இருந்து 0.2 சதவீதத்திற்கும் குறைவான அளவு கச்சா எண்ணெய் கொள்முதல் மட்டுமே செய்து வந்துள்ளது.
ஆனால் உக்ரைன் ரஷ்யா போர் தொடங்கிய பிறகு, ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திக் கொண்டது. இதையடுத்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் ரஷ்யாவிடம் இருந்து பெரும் அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதியை செய்ய தொடங்கியது.
டிரம்பின் நேரடி அழுத்தத்திற்கு பிறகு, 2026 ஜனவரி முதல் மூன்று வாரங்களில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவு கணிசமாக குறைந்துள்ளது.
தற்போது இந்தியா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயின் அளவு நாள் ஒன்றுக்கு 1.1 மில்லியன் பேரல்களாக குறைந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |