15 பில்லியன் டொலர் ஏற்றுமதியை இழக்கும் இந்தியா? ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையால் சிக்கல்
ஐரோப்பிய ஒன்றியத்தின் ரஷ்யா மீதான தடையால் இந்தியா 15 பில்லியன் டொலர் ஏற்றுமதியை இழக்கும் அபாயம் உள்ளது.
ரஷ்யா மீது புதிய தடை
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் போர் நடைபெற்று வருகிறது.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ள ரஷ்யா, போரினால் ஏற்படும் செலவை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விற்பனை மூலம் சமாளித்து வருகிறது.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷ்யாவிற்கு பல்வேறு அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் G7 நாடுகள் இணைந்து, ரஷ்யாவின் எண்ணெய்யை பயன்படுத்தி 3வது நாடுகளில் தயாரிக்கப்படும் பெட்ரோல், டீசல் போன்றவை மீது இறக்குமதி தடை விதித்துள்ளது. இதன் மூலம், போருக்கு ரஷ்யாவிற்கு கிடைக்கும் நிதியில் பெரும் இழப்பை ஏற்படுத்த முயல்கிறது.
இந்த தடை, ரஷ்ய கச்சா எண்ணெயை பயன்படுத்தி டீசல், பெட்ரோல் மற்றும் ஜெட் எரிபொருளை உற்பத்தி செய்து ஐரோப்பிய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளை மோசமாக பாதிக்கும்.
இந்தியாவிற்கு இழப்பு?
2025 ஆம் ஆண்டு 50.3 பில்லியன் டொலர் மதிப்புள்ள கச்சா எண்ணெய்யை, ரஷ்யாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துள்ளது. அதேவேளையில், 2024-25 ஆம் ஆண்டில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 15 பில்லியன் டொலராக இருந்தது.
இந்த தடைகள் காரணமாக, இந்தியாவின் முக்கிய எரிபொருள் ஏற்றுமதியாளர்களான நயாரா எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) சவால்களை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 நாட்களுக்குள் ரஷ்யா உக்ரைனுடன் சமாதானம் செய்யாவிட்டால், ரஷ்ய ஏற்றுமதிகளை வாங்கும் நாடுகள் கடுமையான வரிகளை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அவ்வாறாக ரஷ்யாவின் எண்ணெய் அணுகல் கட்டுப்படுத்தப்பட்டால், இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேள்வி எழுப்பிய போது, "இந்தியா விநியோக ஆதாரங்களை பன்முகப்படுத்தியுள்ளது. முன்பு 27 நாடுகளிலிருந்து வாங்கி வந்தோம், இப்போது சுமார் 40 நாடுகளில் வாங்குகிறோம், கவலையடைய தேவை இல்லை என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |