புழுங்கல் அரிசி ஏற்றுமதி தொடர்பில் இந்தியா எடுத்துள்ள அதிரடி முடிவு: சர்வதேச சந்தையில் மாற்றம்
புழுங்கல் அரிசிக்கான ஏற்றுமதி வரியை இந்திய அரசாங்கம் ரத்து செய்தது, கிடங்குகளில் தானியங்கள் நிரம்பியதை அடுத்தே இந்த முடிவு என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி வரி ரத்து
உலகின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதியாளர்களில் ஒருவரான இந்தியா, அதிகபடியான பருவ மழைக்குப் பிறகு மகத்தான மகசூலை அறுவடை செய்ய உள்ளது.
கடந்த மாதம் ஏற்றுமதி வரியை 20 சதவிகிதத்தில் இருந்து 10 சதவிகிதமாக குறைத்த நிலையில், தற்போது ஏற்றுமதி வரியை இந்தியா ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி, கடந்த மாதம், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்க இந்தியா அனுமதி வழங்கியது. ஆனால் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு ஒரு மெட்ரிக் டன் 490 டொலர் என இந்தியா விலை நிர்ணயித்துள்ளது.
இந்தியாவிலிருந்து வரும் அதிகமான அரிசி ஏற்றுமதிகள் ஒட்டுமொத்த உலகளாவிய விநியோகத்தை மேம்படுத்தும். அத்துடன் மற்ற முக்கிய ஏற்றுமதியாளர்களான பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகியோரும் விலைகளை குறைக்கும் நிலைக்கு தள்ளப்படுவார் என்றே கூறப்படுகிறது.
அறுவடை மீதான நம்பிக்கை
மேலும், புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரியை நீக்கும் முடிவு, புதிதாக முன்னெடுக்கவிருக்கும் அறுவடை மீதான அரசின் நம்பிக்கையை உணர்த்துவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி இல்லை என்பதால், இனி ஆப்பிரிக்க வாடிக்கையாளர்கள் அதிகமாக இந்தியாவை நாடும் நிலை உருவாகும். மட்டுமின்றி, உமி நீக்கப்பட்ட பழுப்பு அரிசி மற்றும் நெல் ஆகியவற்றின் ஏற்றுமதி வரியையும் 10 சதவிகிதம் குறைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |