அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விலக்கு... முதல் முதலாக அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான அனைத்து வரிகளையும் கைவிட இந்தியா முன்வந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வரி விலக்கு
தோஹாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், இந்திய அரசாங்கம் தங்களுடன் ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுத்துள்ளதாகவும், அதில் அவர்கள் அமெரிக்க பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவும் அமெரிக்காவும் தற்போது வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ட்ரம்பின் இந்த வரி விலக்கு விவகாரம் தொடர்பில் இந்தியா இதுவரை பதிலளிக்கவில்லை.
மேலும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ள இந்த வரி விலக்கு தொடர்பில் பொதுவெளியில் தகவல் ஏதும் வெளியாகவும் இல்லை. தோஹாவில் வணிகத் தலைவர்களுடனான ஒரு நிகழ்வில் உரையாற்றிய ட்ரம்ப், போயிங் ஜெட் விமானங்கள் உட்பட அமெரிக்காவிற்கும் கத்தாருக்கும் இடையிலான தொடர் ஒப்பந்தங்களை அறிவித்தார்.
மட்டுமின்றி, ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் செயல்படுவதை தாம் விரும்பவில்லை என்பதை அதன் நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஏப்ரல் மாதம் இந்தியப் பொருட்களுக்கு 27 சதவீதம் வரை வரிகளை விதித்தார் ஜனாதிபதி ட்ரம்ப்.
வர்த்தக பற்றாக்குறை
இதில் ஆட்டம் கண்ட இந்தியா தரப்பு அதிக வரிகள் மீதான ட்ரம்பின் 90 நாள் இடைநிறுத்தத்தின் போது வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த விரைந்துள்ளது. ட்ரம்ப் அறிவித்துள்ள அந்த 90 நாட்கள் எதிர்வரும் ஜூலை 9ம் திகதியுடன் முடிவிற்கு வருகிறது.
சமீப காலம் வரை இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா இருந்தது, இருதரப்பு வர்த்தகம் என்பது 190 பில்லியன் டொலராகும். இந்தியா ஏற்கனவே அமெரிக்காவின் போர்பன் விஸ்கி, மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வேறு சில அமெரிக்க தயாரிப்புகளுக்கான வரிகளைக் குறைத்துள்ளது,
ஆனால் அமெரிக்காவிற்கு இந்தியாவுடன் 45 பில்லியன் டொலர் வர்த்தக பற்றாக்குறை உள்ளது. இதைக் குறைக்கவே ட்ரம்ப் நெருக்கடி அளித்து வருகிறார். இதனிடையே, திங்களன்று அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் செய்யப்படும் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |