இந்தியா இனி ரஷ்ய எண்ணெயை வாங்கப் போவதில்லை: ட்ரம்ப் மீண்டும் உறுதி
உக்ரைன் போர் தொடர்பில் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் சந்திப்பை முன்னெடுத்த டொனால்டு ட்ரம்ப், இந்தியா குறித்து மீண்டும் சர்ச்சை கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.
இந்தியா நிறுத்தும்
ஜெலென்ஸ்கியுடனான விருந்தின் போது, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார்.
புதன்கிழமை வெள்ளைமாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது, ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு உறுதியளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.
ரஷ்ய எண்ணெய் விவகாரத்தின் இந்தியாவின் முடிவு தமக்கு ஏற்புடையதாக இல்லை, ஆனால், பிரதமர் மோடி தமக்கு வாக்குறுதி அளித்துள்ளார், இது மிகப்பெரிய நகர்வு என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், ட்ரம்பின் கருத்தை முற்றாக மறுத்துள்ள இந்திய அரசாங்கம், தேச நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு அதுவென்றும், ரஷ்ய எண்ணெய் விவகாரம் இந்தியாவின் கொள்கை முடிவு என்றும் பதிலளித்திருந்தது.
இந்தியா எண்ணெய் மற்றும் எரிவாயுவை கணிசமாக இறக்குமதி செய்யும் நாடு. நிலையற்ற எரிசக்தி சூழ்நிலையில் இந்திய நுகர்வோரின் நலன்களைப் பாதுகாப்பது எங்கள் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது.
தொலைபேசி உரையாடல்
எங்கள் இறக்குமதி கொள்கைகள் இந்த நோக்கத்தால் முழுமையாக வழிநடத்தப்படுகிறது என வெளிவிவகார அமைச்சகம் அறிக்கை ஒன்றில் விளக்கமளித்தது.
மட்டுமின்றி, ட்ரம்ப் குறிப்பிடுவது போன்று, பிரதமருக்கும் அமெரிக்க ஜனாதிபதிக்கும் இடையே சமீபத்தில் எந்த தொலைபேசி உரையாடலும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
ட்ரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ளது, இதில் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கியதற்காக, கூடுதலாக 25 சதவீத வரிகளும் அடங்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |