இந்தியாவில் விமான ஓடுபாதையில் உள்ள ஒரே மசூதி - எங்கே தெரியுமா?
இந்தியாவில் உள்ள விமான நிலையம் ஒன்றின் செயல்பாட்டில் உள்ள ஓடுபாதை அருகே மசூதி அமைந்துள்ளது.
விமான ஓடுபாதையில் மசூதி
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தாவில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்(nscbi) அமைந்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் செயல்பாட்டில் உள்ள ஓடுபாதைக்கு அருகில் மசூதி ஒன்று அமைந்துள்ளது.
இந்த மசூதியானது 1890 ஆம் ஆண்டு முதல், சுமார் 1,200 சதுர அடி நிலப்பரப்பில் இயங்கி வருகிறது.
ஆனால் விமான நிலையம் 1924 ஆம் ஆண்டில்தான் பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் திறக்கப்பட்டது.

1960 ஆம் ஆண்டில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக அருகே உள்ள கிராமங்களில் இருந்து கூடுதல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. அந்த குடியிருப்பில் இந்த மசூதியும் அமைந்திருந்தது.
விமான நிலைய விரிவாக்கத்தின் போது, மசூதி விமான நிலையத்திற்கு உள்ளே வந்தது. ஆனால், மசூதி அப்போது பாதுகாக்கப்பட்டது.
விமான நிலையத்தில் முதன்மை ஓடுபாதை பெரும்பாலான போக்குவரத்தை கையாண்டு வரும் நிலையில், பிரதான பாதை கிடைக்காதபோது இரண்டாம் நிலை ஓடுபாதை பயன்படுத்தப்படுகிறது.
இந்த இரண்டாம் நிலை ஓடுபாதைக்கு மிகவும் அருகாமையில் தான் அந்த மசூதி அமைந்துள்ளது.
பாதுகாப்பு குறைபாடு
AAI விமானப் பாதுகாப்பு நெறிமுறப்படி, பாதுகாப்பான வேகக் குறைப்பிற்காக ஓடுபாதையின் முனைப்புள்ளியில் இருந்து, குறைந்தது 240 மீட்டர் தெளிவான இடம் தேவைப்படுகிறது.
ஆனால், மசூதி அமைந்துள்ளதன் காரணமாக 150 மீட்டர் மட்டுமே இடம் கிடைத்துள்ளது. இதன் காரணமாக இரண்டாம் நிலை ஓடுபாதையின் வடக்கு முனையை சுமார் 88 மீட்டர் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

கோழிக்கோட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டில் ஓடுபாதையில் ஏற்பட்ட விமான விபத்துக்கு பின்னர், இந்த மசூதியால் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு குறைபாடு குறித்து கவலை எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |