பயன்படுத்தப்படாத இலங்கை விமான நிலையத்தை வாங்க இந்தியா-ரஷ்யா கூட்டுமுயற்சி
உலகின் மிகவும் பயன்படுத்தப்படாத விமான நிலையத்தை இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக விரைவில் வாங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
சீனாவின் பணத்தில் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் அம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மத்தள நகரில் அமைந்துள்ளது.
இது மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையம் (MRIA) அல்லது அம்பாந்தோட்டை விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது.
கடனுக்கு ஈடாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை 99 வருட குத்தகைக்கு சீனாவுக்கு வழங்கியுள்ளது.
அம்பாந்தோட்டை விமான நிலையத்தை வாங்குவதற்கு இந்தியாவும் ரஷ்யாவும் இணைந்து கூட்டு முயற்சியில் ஈடுபடலாம் என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இதற்கு ஒரே காரணம் இந்தியப் பெருங்கடலில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவதுதான்.
இந்தியா-ரஷ்யா தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சி
இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களை உள்ளடக்கிய இந்தியாவுடன் கூட்டு முயற்சியில் ஈடுபட ரஷ்யா விருப்பம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்தி இணையத்தளமான நியூஸ்ஃபர்ஸ்ட் தெரிவித்துள்ளது.
இந்த விமான நிலையத்தை இயக்குவதற்கு இந்தியாவுடன் கூட்டு முயற்சியை உருவாக்குவது குறித்து இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan S. Dzhagaryan தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தம் பற்றி ரஷ்ய தூதர் சொன்னது என்ன?
இலங்கைக்கு வரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் குறிப்பிடும் ரஷ்ய தூதுவர், மத்தள விமான நிலையம் மீது அவர்கள் ஆர்வம் காட்டுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று கூறினார்.
தெற்காசியாவில் அதிகளவான ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருவதாகவும், இலங்கை இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.
2024-ஆம் ஆண்டில் சுமார் 12 லட்சம் ரஷ்யர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருவார்கள் என நம்புகிறோம் என்றார்.
இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் MRIA-ன் செயற்பாடுகளை ஒரு தனியார் கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |