ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தினால்..! எரிபொருள் செலவில் ஏற்படும் முக்கிய மாற்றங்கள்!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால் எத்தகைய மாற்றங்கள் இந்தியாவில் ஏற்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பு
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை கண்டித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்திய பொருட்களுக்கான ஏற்றுமதி வரியை 50%-ஆக உயர்த்தி அறிவித்தார்.
இந்த வரி விதிப்பு இருநாடுகளுக்கு இடையே மிகப்பெரிய உறவு விரிசலை ஏற்படுத்தியுள்ளது, அத்துடன் அமெரிக்காவின் புதிய வரி கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தினால், இந்தியாவில் எரிபொருள் விலையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பதை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எரிபொருள் விலையில் ஏற்படும் மாற்றம்?
உலக அளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் ரஷ்யா 10% தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
அதன்படி, அனைத்து நாடுகளும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி பிறகு, எண்ணெய் உற்பத்தி நாடுகள் தங்களின் உற்பத்தியை அதிகரிக்காவிட்டால் உலக அளவிலான கச்சா எண்ணெயின் விலை 10% வரை உயரக்கூடும்.
இந்தியாவை பொறுத்தவரை ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினார், நடப்பு நிதியாண்டில் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களும், அடுத்த நிதியாண்டில் 12 பில்லியன் டொலர்களும் அதிகரிக்கும்.
இதன் காரணமாக பெட்ரோல், டீசல் போன்ற எரி பொருட்களின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.
இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி வரலாறு
உக்ரைன் ரஷ்யா போருக்கு முன்னதாக இந்தியாவின் முதன்மை எண்ணெய் இறக்குமதியாளராக ஈராக் இருந்து வந்தது.
அதனை தொடர்ந்து, இந்த பட்டியலில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளும் இருந்தன.
போருக்கு பிறகு அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளின் பொருளாதார தடை காரணமாக ரஷ்யா தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை ஊக்குவித்தது.
இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் உத்திகள் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா செய்ய தொடங்கியது.
2020ம் நிதியாண்டு வரை இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 1.7% மாக இருந்த ரஷ்யாவின் பங்கு, 2025 ம் நிதியாண்டில், 35.1%மாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியா சுமார் 245 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்துள்ளது, இதில் ரஷ்யாவிடமிருந்து மட்டும் 88 மில்லியன் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
ஒருவேளை ரஷ்யாவுடனான எண்ணெய் இறக்குமதி திட்டத்தை இந்தியா ரத்து செய்தால், மீண்டும் ஈராக், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுடன் இந்தியா எண்ணெய் இறக்குமதிக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளலாம் என SBI அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |