நாட்டு மக்களை கொன்று குவிக்கும் மியான்மர் இராணுவத்திற்கு கோடி கணக்கில் நிதியளிக்கும் இந்திய தொழிலதிபர்! கசிந்த அதிர வைக்கும் தகவல்
யாங்கோனில் துறைமுகம் அமைக்கும் ஒப்பந்தத்திற்காக மியான்மர் இராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்திற்கு இந்திய தொழிலதிபரான அதானி குழுமம் மில்லியன் கணக்கான அமெரிக்க டொலர் வழங்குவதாக ஏபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
யாங்கோன் பிராந்திய முதலீட்டு ஆணையத்திலிருந்து கசிந்த தரவுகளின்படி, ‘நில குத்தகை கட்டணமாக’ அதானி குழுமம் மியான்மர் பொருளாதாரக் கழகம் (MEC) என்ற நிறுவனத்திற்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கியது தெரியவந்துள்ளது
அதுமட்டுமின்றி அவுஸ்திரேலிய சர்வதேச நீதித்துறை மையம் (ACIJ) மற்றும் Justice For Myanmar என்ற செயல்பாட்டுக் குழு கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘நில அனுமதி கட்டணமாக’ துறைமுக தளத்தின் உரிமையாளரான MEC நிறுவனததிற்கு அதானி குழுமம் 22 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கக்கூடும் என கூறியுள்ளது.
அதானி குழுமம் பணம் வழங்கிய MEC நிறுவனம் மியான்மர் இராணுவம் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் மற்றும் ரோஹிங்கியா இனப்படுகொலை குற்றங்களுக்கான நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையின் கீழ் மியான்மர் இராணுவம் உள்ளது.
இந்த இராணுவ நிறுவனங்கள் மியான்மர் இராணுவத்திற்கு நேரடியாக அத்தியாவசிய நிதி வழங்குகிறதா என்ற கவலை எழுந்துள்ளது.
பல முறை பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட பின்னரும், MEC உடனான மியான்மர் ஒப்பந்தத்திலிருந்து விலக அதானி குழுமம் மறுத்துள்ளது.
அதானி MEC-க்கு வழங்கும் பணம் மறைமுகமாக மியான்மர் இராணுவத்திற்கு சர்வதேச குற்றங்களை நடத்துவதற்கு நிதியளிக்கும் என கூறப்படுகிறது.
MEC-க்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் பொருாளதார தடை விதித்துள்ளது. இதனால், எதிர்காலத்தில் அதானி துறைமுகத்தில் 3.2 மில்லியன் டொலர் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்து அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதார தடையை தொடர்ந்து அதானி துறைமுகத்தில் அவுஸ்திரேலியா அரசாங்கம் செய்யவிருந்த முதலீடு தடைப்படும் என கூறப்படுகிறது.
அவுஸ்திரேலியாவில் குவின்ஸ்லாந்தின் கார்மைக்கேல்' சுரங்க திட்டம் மற்றும் ரயில் பாதை திட்டம் என இவ்விரு திட்டப் பணிகளையும் அதானி குழுமம் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
எனினும், மியான்மர் இராணுவத்துடன் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அதானி குழுமம் மறுத்துள்ளது.
மியான்மரில் ஒருபோதும் இராணுவத் தலைமையுடன் சந்திப்பில் ஈடுபடவில்லை என்ற நிறுவனத்தின் கூற்றுக்கு முரணாக, அதானி துறைமுகத்தின் முதலாளி 2019 ஆம் ஆண்டில் மியான்மர் இராணுவ ஆட்சிக்குழுவின் உயர் ஜெனரலை சந்தித்ததை வீடியோ மற்றும் புகைப்படங்கள் காட்டுகின்றன.


