திட்டம் தீட்டிய இஸ்ரேல்.., லெபனானில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய அரசு எச்சரிக்கை
லெபனானை தாக்க இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இஸ்ரேல் திட்டம்
கடந்த 2023 -ம் ஆண்டு முதல் இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது.
இதில் ஹமாஸுக்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு ஆதரவு அளித்து வருகிறது. இந்த அமைப்பானது இஸ்ரேலில் உள்ள பகுதிகளின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
அதன்படி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200 -க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஹிஸ்புல்லா அமைப்பு வீசியுள்ளது.
அந்தவகையில், கடந்த 27 -ம் திகதி இஸ்ரேலின் கோலன் குன்றுகளை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது ஒரு ராக்கெட் குண்டு கால்பந்து விளையாட்டு மைதானத்தில் விழுந்ததில் 12 பேர் உயிரிழந்தனர்.
இதன் காரணமாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு முகாம்களின் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
இந்திய அரசு எச்சரிக்கை
இந்த சம்பவத்தால் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், "தற்போது நிலவியுள்ள சூழலின் காரணமாக லெபனானில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகிறோம்.
இந்தியாவில் இருந்து லெபனானிற்கு யாரும் வர வேண்டாம். இதில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |