இந்திய ஓவியக் கலையின் உச்சம்: எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள் ரூ. 119 கோடிக்கு ஏலம்!
இந்திய ஓவியக் கலைஞர் எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள் ரூ. 119 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள் ரூ. 119 கோடிக்கு ஏலம்!
இந்திய ஓவியக் கலையின் ஜாம்பவானாக கருதப்படும் எம்.எஃப். ஹுசைனின் ஓவியங்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிறிஸ்டி ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில், யாரும் எதிர்பாராத வகையில் ரூ. 119 கோடிக்கு ஏலம் போயுள்ளன.
இது இந்தியக் கலை வரலாற்றில் ஒரு புதிய மைல் கல்லாக கருதப்படுகிறது.
ஹுசைனின் கலைப் பயணம்
மகாராஷ்டிர மாநிலத்தின் பண்டர்பூரில் 1915 ஆம் ஆண்டு பிறந்த எம்.எஃப். ஹுசைன், தனது தனித்துவமான ஓவியங்களால் உலகளவில் புகழ் பெற்றார்.
இந்தியாவின் பிகாசோ என்று போற்றப்படும் அவர், தனது வாழ்நாளில் சுமார் 60,000 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.
இவரது சில ஓவியங்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தாலும், இந்திய ஓவியக் கலைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ஏலம்
1954 ஆம் ஆண்டில், டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியில் ஹுசைனின் கிராமிய ஓவியங்களை நார்வே நாட்டைச் சேர்ந்த மருத்துவர் லியான் வெறும் ரூ. 1,400 க்கு வாங்கினார்.
பின்னர், அவர் அந்த ஓவியங்களை ஓஸ்லோ பல்கலைக்கழக மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கினார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த ஓவியங்கள் கிறிஸ்டி ஏல நிறுவனத்தின் கைக்கு வந்தன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஏலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடாரின் மனைவி கிரண் நாடார், ஹுசைனின் ஓவியங்களை ரூ. 119 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளார்.
இவர் டெல்லியில் கிரண் நாடார் கலை அருங்காட்சியகத்தை நடத்தி வருகிறார். ஹுசைனின் இந்த ஓவியங்கள் அங்கு காட்சிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய சாதனை
இந்த ஏலம், இந்திய ஓவியக் கலை வரலாற்றில் ஒரு புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு, 2023 ஆம் ஆண்டில் மும்பையில் நடைபெற்ற ஏலத்தில், இந்திய பெண் ஓவியர் அம்ரிதா ஷெர்-கில்லின் ஓவியம் ரூ. 61.8 கோடிக்கு ஏலம் போனதே சாதனையாக இருந்தது.
தற்போது, ஹுசைனின் ஓவியங்கள் அந்த சாதனையை முறியடித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |