செல்பி எடுக்கும்போது அணைக்குள் விழுந்த மொபைல்: அரசு அலுவலர் செய்த அராஜக செயல்
இந்திய மாநிலம் ஒன்றில், தனது மொபைல் போன் அணைக்குள் விழுந்ததால், அரசு அலுவலர் ஒருவர், அணையிலிருந்த மொத்த தண்ணீரையும் வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தண்ணீரில் விழுந்த 100,000 ரூபாய் மதிப்புள்ள மொபைல்
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உணவு பாதுகாப்பு ஆய்வாளராக இருப்பவர் ராஜேஷ் விஸ்வாஸ் (Rajesh Vishwas). அணை ஒன்றிற்குச் சென்றிருந்த ராஜேஷ், செல்பி எடுக்கும்போது அவருடைய மொபைல் போன் அணைக்குள் விழுந்துள்ளது.
இந்திய மதிப்பில் 100,000 ரூபாய் மதிப்புள்ள தனது மொபைல் தண்ணீருக்குள் விழுந்ததால், உள்ளூர் நீச்சல் வீரர்களை அழைத்து தனது மொபைலை மீட்கச் சொல்லியிருக்கிறார் ராஜேஷ்.
வீணான இரண்டு மில்லியன் லிற்றர் தண்ணீர்
நீச்சல் வீரர்களால் தனது மொபைலை மீட்க முடியாமல் போகவே, மோட்டார்கள் மூலம் அணையிலிருந்த தண்ணீரை வெளியேற்ற உத்தரவிட்டுள்ளார் ராஜேஷ்.
அதைத் தொடர்ந்து, இரண்டு மில்லியன் லிற்றர் தண்ணீர் அணையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது. வீணாக்கப்பட்ட அந்த தண்ணீரைக் கொண்டு சுமார் 600 ஹெக்டேர் விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச முடியுமாம்.
அவ்வளவு தண்ணீரையும் வெளியேற்றியபின் ராஜேஷுடைய மொபைல் கிடைத்தாலும், அது பயன்படுத்தும் நிலையில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
@RAMANMANN1974
அதிகாரிகள் நடவடிக்கை
அரசு அலுவலர் ஒருவர் அணை நீரை வீணாக்கிக்கொண்டிருக்கிறார் என்ற செய்தி அறித்த நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் சம்பவ இடத்துக்கு விரைந்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, ராஜேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தனது மொபைலில் அரசின் முக்கிய தரவுகள் இருந்ததால்தான் தனது மொபைலை மீட்க முயன்றதாக அவர் கூறியுள்ள நிலையில், அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.