அமெரிக்க வங்கியிடம் 100 மில்லியன் டொலர் மோசடி - இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது
அமெரிக்க வங்கியிடம் 100 மில்லியன் டொலர் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகேந்தர் மகிஜானி கைது
இந்திய வம்சாவளி தொழிலதிபரான 44 வயதான மகேந்தர் மகிஜானி (mahender makhijani), அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்று வசித்து வருகிறார்.
கலிபோர்னியாவின் நியூபோர்ட் பீச்சில் உள்ள தனது மாளிகையில் வைத்து இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காப்பீட்டுப் பத்திரங்களின் உரிமைப் பதிவுகளைத் திருத்தி, ஒரு வங்கியிடமிருந்து சுமார் 100 மில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.954.2 கோடி) மோசடி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகிஜானிக்கு சொந்தமான 'கேண்டர் குரூப் V LLC' என்ற நிறுவனம், சம்பந்தப்பட்ட வங்கியுடன் கடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நிலங்களை அடிப்படையாகக் கொண்ட கடன்களை உருவாக்க அல்லது வாங்க, வங்கி சுமார் 100 மில்லியன் டொலர்களை கேண்டர் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது.
அதன்பிறகு கேன்டர், தான் பெற்ற கடன்களையும் அவற்றின் பிணையங்களையும் வங்கிக்கு அடமானம் வைத்து, அந்தக் கடன் தொகையிலிருந்து வங்கிக்குத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
100 மில்லியன் டொலர் மோடி
ஆனால், போலியான உரிமை காப்பீட்டுப் பத்திரங்களைத் தயாரித்து வங்கியை ஏமாற்றியுள்ளார்.
மேலும், போதைப்பொருள் மற்றும் பெண்களை வைத்து தனிப்பட்ட விருந்துகளை நடத்தி, இந்த விருந்துகளில் சில வங்கி ஊழியர்களும் கலந்துகொண்டுள்ள நிலையில், அந்த வீடியோக்களை வைத்து அவர்களை மிரட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.

மேலும், மகிஜானி தனது கீழ் பணிபுரிபவர்களை அவர்களின் குடும்பத்தைத் தெருவில் விட்டுவிடுவேன், அவர்களின் பிள்ளைகளை நலத்திட்ட உதவியில் விட்டுவிடுவேன் என்றும் மிரட்டியதாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன.
ஆயுதம் ஏந்திய அடியாட்களை வைத்து தெற்கு கலிபோர்னியாவின் முக்கிய பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஒரு உணவகத்தை கைப்பற்றியதாக அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த மாதம், லகுனா பீச் தொழிலதிபர் முகமது ஹோனார்க்கருடன் மகிஜானி மேற்கொண்ட ரியல் எஸ்டேட் பணப்பரிமாற்றம் தொடர்பாக, அவர் 1.3 பில்லியன் டொலருக்கும் (இந்திய மதிப்பில் ரூ.12,391.6 கோடி) அதிகமான இழப்பீட்டிற்குப் பொறுப்பாவார் என்று ஒரு நடுவர் தீர்ப்பளித்ததாக கூறப்படுகிறது.
மகேந்தர் மகிஜானி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |