தமிழகத்திற்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி! காரணம் இதுதான்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி தமிழகத்துக்கு வருகை தரவுள்ளார்.
தமிழ்நாட்டில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு கடந்த ஆண்டு அனுமதி அளித்திருந்தது.
இச்சூழலில் சமீபத்தில் டெல்லியில் நடந்த அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கலந்துகொண்டார்.
அப்போது 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் 850 மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், கூடுதலாக 800 மாணவர்களை சேர்க்க ஒப்புதல் அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரின் தொடர் கோரிக்கையை ஏற்று, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தலா 150 மாணவர்கள் வீதம், கூடுதலாக 600 மாணவர்களின் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
அதன்படி மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்ற நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளன. இதையொட்டி 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 12ஆம் திகதி தமிழகம் வரவிருக்கிறார் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் விருதுநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.