சாலையைக் கடக்கும்போது இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
அவுஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி!
இந்தியப் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம் 14ஆம் திகதி இரவு, அவுஸ்திரேலியாவில் வாழும் சமன்விதா தரேஷ்வர் (33), சிட்னியிலுள்ள Hornsby என்னுமிடத்தில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.

எட்டு மாத கர்ப்பிணியான சமன்விதா சாலையைக் கடக்க முயல்வதைக் கண்ட கியா கார்னிவல் கார் ஒன்றின் சாரதி, அவர் சாலையைக் கடப்பதற்கு வசதியாக தனது காரின் வேகத்தைக் குறைத்துள்ளார்.
துரதிர்ஷ்டவசமாக, அவரது காருக்குப் பின்னால் ஒரு பி எம் டபிள்யூ கார் வேகமாக வந்துகொண்டிருந்திருக்கிறது.
வேகமாக வந்துகொண்டிருந்த அந்த பி எம் டபிள்யூ கார் இந்த கியா கார் மீது மோத, கியா கார் சமன்விதா மீது மோதியுள்ளது.
படுகாயமடைந்த சமன்விதாவை அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும், அவரையோ, அவரது கர்ப்பத்திலிருந்த குழந்தையையோ மருத்துவர்களால் காப்பாற்றமுடியாமல் போயுள்ளது.
அந்த பி எம் டபிள்யூ காரை, 19 வயதாகும் ஆரோன் (Aaron Papazoglu) என்னும் இளைஞர் ஓட்டிவந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமன்விதா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. அவரும் அவரது கணவரான வினீத்தும் அவுஸ்திரேலியாவில் வீடு ஒன்றைக் கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |