தங்கையிடமிருந்து நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்: இந்திய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
பிரித்தானியாவில் வேலை தேடிக்கொண்டிருந்த இந்திய இளம்பெண்ணொருவர், தன் அண்ணனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
தான் ஒரு நல்ல செய்தி கூறப்போவதாக அவர் அனுப்பிய குறுஞ்செய்தி கூற, ஆனால், அந்த அண்ணனுக்குக் கிடைத்ததோ ஒரு துயரச் செய்தி!
நல்ல செய்திக்காக காத்திருந்த அண்ணன்
இந்தியாவின் கொல்கொத்தாவைச் சேர்ந்த அனிஷா சக்கரவர்த்தி (28), பிரித்தானியாவில் கல்வி கற்பதற்காகச் சென்றுள்ளார்.

பட்டப்படிப்பு முடித்து வேலை தேடிக்கொண்டிருந்தார் அனிஷா. அனிஷா இங்கிலாந்தின் பர்மிங்காமில் தங்கியிருக்க, அனிஷாவின் அண்ணன் ரக்திம், அமெரிக்காவில் வாழ்ந்துவருகிறார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தன் அண்ணனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் அனிஷா. தான் ஒரு நல்ல செய்தி கூறப்போவதாக அவர் அனுப்பிய குறுஞ்செய்தி கூறியுள்ளது.
அதாவது, தனக்கு ஒரு வேலை தயாராகிவிட்டது என்பதைத்தான் நல்ல செய்தி என குறிப்பிட்டுள்ளார் அனிஷா. பதிலுக்கு ரக்திம் தங்கைக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்ப, அவர் அனுப்பிய செய்தி அனிஷாவை சென்றடையவில்லையாம்.
பின்னர் ரக்திமுக்கு ஒரு செய்தி வந்துள்ளது. அது, அவரது தங்கையான அனிஷா விபத்தொன்றில் உயிரிழந்துவிட்டார் என்னும் துயரச் செய்தி!
நடந்தது என்ன?
அதாவது, அண்ணனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு வெள்ளிக்கிழமை இரவு தன் தோழிகளுடன் இரவு விடுதிக்குச் சென்றுள்ளார் அனிஷா.
இரவு விடுதியிலிருந்து தான் தங்கியிருந்த அறைக்குத் திரும்பிக் கொண்டிருந்த அனிஷா மீது கார் ஒன்று மோதியுள்ளது.
அதிகாலை 2.00 மணியளவில் பொலிசாருக்கு தகவல் கிடைக்க, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தபோது, அனிஷா உயிருடன் இல்லை.
அனிஷா மீது காரை மோதிக் கொன்ற 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதையிலிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்காவிலிருந்த அண்ணனும், இந்தியாவிலிருந்த தந்தையும் அனிஷா வேலைக்குச் செல்லப்போகிறார் என்னும் நல்ல செய்தியைக் கேட்க ஆவலாக இருந்த நிலையில், இப்போது அவரது உடல் இந்தியாவுக்கு வரப்போவதை எதிர்பார்த்துக் கண்ணீருடன் காத்திருக்கிறது அவருடைய குடும்பம்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |