உக்ரைனில் கொல்லப்பட்ட இந்திய மாணவனின் கடைசி நிமிடங்கள்
யுக்ரேனின் கார்கிவ் பகுதியில் நடந்த தாக்குதலில் இன்று கொல்லப்பட்ட இந்திய மருத்துவ மாணவர் நவீன் எஸ் ஞானகெளடர், இறப்புக்கு முன்பு உணவு வாங்க போதிய பணம் இல்லாததால் அதை பரிமாற்றம் செய்யும்படி கேட்டிருந்தார் என அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களிலேயே அவர் குண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட தகவலால் கர்நாடகாவிலும் யுக்ரேனிலும் வாழும் அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
``யுக்ரேனில் பிற்பகல் 3 மணி முதல் காலை 6 மணி வரையிலான ஊரடங்கு நேரம் முடிந்ததும் உணவு வாங்க வெளியே செல்வதாகவும் போதிய பணம் இல்லாததால் பணம் பரிமாற்றம் செய்யும்படியும் நவீன் கேட்டிருந்தார். அவர் எங்களுக்காக அதிக உணவை வாங்க விரும்பினார்,'' என்று நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர் ஸ்ரீகாந்த் சென்னகெளவுடா கூறினார்.
கார்கிவ் அடுக்குமாடி குடியிருப்புக்கு அடித்தளத்தில் உள்ள பங்கர் அறையில் இருந்தபடி ஸ்ரீகாந்த் பிபிசி ஹிந்தியிடம் நவீனுடனான கடைசி நிமிட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
கர்நாடக மாநிலம், ஹாவேரி மாவட்டம், ரானேபென்னூர் தாலுகாவில் உள்ள சாலகேரி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன். ஸ்ரீகாந்துடன் சேர்ந்து, கார்கிவ் தேசிய மருத்துவ பல்கலைக்கழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மருத்துவம் படித்து வந்தார்.
யுக்ரேனிய நேரப்படி காலை 6.30 மணியளவில் நவீன் வசிப்பிட கட்டடத்தில் இருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.
நவீனும் ஸ்ரீகாந்தும் வேறு சில நண்பர்களுடன் பகிர்ந்து கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு அறைகளில் வசித்தனர். அந்த இடத்தில் இருந்து சில அடி தூரத்தில் பல்பொருள் அங்காடி உள்ளது.
``நான் பணத்தை நவீனின் செல்பேசி கணக்குக்கு மாற்றினேன், ஐந்து அல்லது பத்து நிமிடங்களுக்குப் பிறகு நவீனை தொடர்பு கொள்ள முயற்சித்தேன், அவர் என் அழைப்புகளை எடுக்கவில்லை. பலமுறை தொடர்பு கொண்டேன். அதன் பிறகு நான் அவரை உள்ளூர் எண்ணில் தொடர்பு கொண்டு அழைக்க முயற்சித்தேன். அப்போதும் என் அழைப்புகளை எடுக்கவில்லை. பின்னர் யாரோ ஒருவர் எனது அழைப்பை எடுத்தார், அவர் யுக்ரேனிய மொழியில் பேசினார். அது எனக்கு புரியவில்லை,'' என்றார் ஸ்ரீகாந்த்.
தங்குமிடத்தில் இருந்த உள்ளூரைச் சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர் உதவியுடன் மறுமுனையில் பேசியவர் 'என்ன கூறுகிறார்?' என கேட்க முயன்றேன்.
இதையடுத்து, மறுமுனையில் பேசியவரிடம் தகவல்களைப் பெற்ற பக்கத்து வீட்டுக்காரர், 'உங்கள் நண்பர் இப்போது இல்லை,' என்றார்.
"என்னால் நம்பவே முடியவில்லை. நான் பல்பொருள் அங்காடிக்குச் சென்றேன், அங்கு குண்டு தாக்குதல் நடந்தது போல தெரியவில்லை. அங்கு துப்பாக்கி சூடு நடந்திருந்தது, "என்று ஸ்ரீகாந்த் கூறினார்.
`கார்கிவ் நகரில் குண்டு தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக அதிகம் நடக்கின்றன. நாங்கள் மொத்தம் ஒன்பது பேர் குடியிருப்பின் பதுங்கு குழியில் இருந்தோம். எங்களுடன் இருந்தவர்களில் ஐந்து பேர் முன்பே வெளியேறி விட்டனர். ஆபத்தை விலை கொடுத்து வாங்க விரும்பாததால் எஞ்சியவர்கள் வெளியேறாமல் அங்கேயே இருந்தோம். நாளை காலையில் கும்பலாக வெளியே செல்ல நினைத்தோம்,'' என்றார் ஸ்ரீகாந்த்.
Shocked on death of Naveen Gyanagoudar, student from Karnataka, in bomb shelling in Ukraine. My deep condolences to the family. May his soul rest in peace.
— Basavaraj S Bommai (@BSBommai) March 1, 2022
We are constantly in touch with MEA and will make all efforts to bring back his mortal remains.
``நவீன் ஒரு கனிவானவன். மிகவும் புத்திசாலி. மருத்துவ படிப்பின் மூன்றாம் ஆண்டில் 95 சதவீதம் மதிப்பெண் பெற்றான். மிகவும் படிப்பாளி மற்றும் மிகவும் அடக்கமானவர்,'' என்றார் ஸ்ரீகாந்த்.
"இந்திய தூதரகத்தில் இருந்து யாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. நவீனின் உடல் எங்குள்ளது என்றும் தெரியவில்லை,'' என்கிறார் அவர்.
நவீன் மற்றும் ஸ்ரீகாந்த் இருவரும் 2000ஆம் ஆண்டில் பிறந்தவர்கள். கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்.
அதே சமயம், கர்நாடகாவின் ஹாவேரி பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இது அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த தொகுதியும் கூட. இந்த இடம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் இருந்து 300 கி.மீ தூரத்தில் உள்ளது.
கார்கிவ் நகரில் கர்நாடக மாணவர் நவீன் மரணம் அடைந்தது தொடர்பாக அவரது குடும்பத்தினரை அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்திருக்கிறார். சேகரப்பாவின் தந்தை சேகர் கெளடாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் பொம்மை ஆறுதல் கூறினார்.
நவீனைப் பற்றிய கூடுதல் விவரங்களைப் பெற்ற பொம்மை, துயரமான இந்த நேரத்தில் அவரது குடும்பத்துடன் துணை நிற்பதாகக் கூறினார்.
நவீனின் உடலை இந்தியா கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேசி வருவதாகவும் நீவினின் தந்தையிடம் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் நவீனின் தந்தையை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
முன்னதாக காலையில்தான் தமது மகனுடன் செல்பேசியில் பேசியதாக சேகரப்பா கூறினார். தினமும் இரண்டு அல்லது மூன்று முறை பெற்றோரை தொடர்பு கொள்வதை நவீன் வழக்கமாகக் கொண்டிருந்ததாகவும் சேகரப்பா கூறினார்.
யுக்ரேனில் ரஷ்யா மேற்கொண்டுள்ள ஆக்கிரமிப்பு படையெடுப்புக்கு பிறகு அங்கு பதிவான முதலாவது இந்தியரின் மரணமாக நவீனின் சம்பவம் உள்ளது. அவர் குண்டு தாக்குதலில் பலியானதாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். ஆனால், நவீன் துப்பாக்கி தோட்டா பாய்ந்து இறந்ததாக அவரது அறை நண்பர் தெரிவிக்கிறார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள ரஷ்யா மற்றும் யுக்ரேனிய தூதர்களை இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்க்லா அழைத்து யுக்ரேனில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்த அவரவர் அரசுகளிடம் வலியுத்தும்படி கண்டிப்புடன் கூறியிருக்கிறார்.
இந்த தகவலை டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்திய வெளியுறுத்துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்ஷி தெரிவித்தார்.