இத்தாலியில் இந்திய தொழிலாளர் உயிரிழப்பு: வெளிவிவகார அமைச்சகம் முக்கிய தகவல்!
இத்தாலியில் இயந்திர விபத்தில் கை துண்டிக்கப்பட்டு உயிரிழந்த இந்தியரின் முதலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலியில் இந்தியருக்கு நேர்ந்த பயங்கரம்
இத்தாலியில் நிகழ்ந்த ஒரு மனிதத்தன்மை இல்லாத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்துள்ளது. 31 வயதான இந்திய குடியுரிமை பெற்ற சத்னம் சிங்( Satnam Singh) என்பவர் விபத்து ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அறிக்கைகளின்படி, ரோம் அருகே உள்ள ஒரு காய்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, கனரக வேளாண்மை இயந்திரத்தில் சிக்கி அவரது கை துண்டிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவ உதவி பெற வேண்டிய நிலையில், சிங்கின் முதலாளி, அண்டோனெல்லோ லோவாடோ, கொடூரமான முடிவை எடுத்தார். அவர், சிங்கையும் அவரது மனைவியையும் வேனில் ஏற்றி, அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் சாலையோரம் விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
உதவி கிடைக்காமல், இரத்தப்போக்கு காரணமாக சிங்கின் நிலை மோசமடைந்தது. பின்னர் அவர் கண்டுபிடிக்கப்பட்டு, ரோமில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இருப்பினும், மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
முதலாளி கைது
இந்நிலையில் இத்தாலியின் வடக்கு பகுதியில் உயிரிழந்த இந்திய தொழிலாளர் சத்னம் சிங்கிற்கு சிகிச்சை அளிக்க வேண்டிய கடமைப்பட்டிருந்த முதலாளி கைது செய்யப்பட்டதாக வெளிவிவகார அமைச்சகம் (MEA) தெரிவித்துள்ளது.
சிகிச்சையில் அலட்சியம் காட்டப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சகம், சத்னம் சிங்கின் குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக கூறியுள்ளது.
வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால், "இது ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை. தொழிலாளர்களுக்கு நியாயமான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்வது அவசியம். சத்னம் சிங்கின் குடும்பத்திற்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று வலியுறுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |