இந்தோனேசியாவின் மிட்டாய் தொழிற்சாலையில் தீ விபத்தில் 3 பேர் பலி: 30 தொழிலாளர்களைக் காணவில்லை
Indonesia candy factory fire accident 3 dead: இந்தோனேசியாவின் மிட்டாய் தொழிற்சாலையில் நிகழ்ந்த எதிர்பாராத தீ விபத்தில் 3 பேர் வரை பலியாகியுள்ளனர்.
மிட்டாய் தொழிற்சாலையில் தீ விபத்து
இந்தோனேசியாவின் பான்டென் மாகாணத்தில் உள்ள மிட்டாய் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் குறைந்தது 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் 30 ஊழியர்கள் வரை காணவில்லை என்று மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தலைநகர் ஜகார்த்தாவிற்கு மேற்கே 50 கிலோமீட்டர் தூரத்தில் செராங் மாகாணத்தில் உள்ள சிகாண்டே தொழில்துறை வளாகத்தில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் முதல் இரவுக்குள் மிட்டாய் மற்றும் சர்க்கரைப் பொருட்கள் தயாரிக்கும் போனுசா அகுங் முலியா தொழிற்சாலையில் இந்த தீ விபத்தானது ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான காட்சியில், இரவில் கட்டிடம் ஒன்று முழுமையாக தீயில் எரிந்து இடிந்து விழும் காட்சிகள் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 40 ஊழியர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என தொழிற்சாலை நிர்வாகம் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
4 பேர் வரை காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், தொழிற்சாலையின் பல பகுதிகளில் இன்னும் தீ தொடர்ந்து எரிந்து வருவதால் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அது தொடர்பான விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக உள்ளூர் பேரிடர் மேலாண்மை முகமை தகவல் வெளியிட்டுள்ளது.