மதம் காரணமான தயக்கத்தால் தடுப்பூசியை மறுக்கும் பெற்றோர்கள் - 20 குழந்தைகள் உயிரிழப்பு
தட்டம்மையால் 20 குழந்தைகள் உயிரிழந்தும், சில பெற்றோர்கள் ஹராம் எனக்கூறி தடுப்பூசியை மறுத்து வருகின்றனர்.
தட்டமைக்கு 20 குழந்தைகள் உயிரிழப்பு
இந்தோனேசியாவில், இந்த ஆண்டில் மட்டும் 2600க்கும் அதிகமான குழந்தைகளை தட்டம்மை பாதித்து, அதில் 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இதனை கட்டுப்படுத்த, 72,000 தடுப்பூசிகளை விநியோகிக்க இந்தோனேசிய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
இதன்படி, தடுப்பூசி செலுத்தப்பட வேண்டிய குழந்தைகளின் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு, சுகாதாரத்துறை ஊழியர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
ஆனால் மதத்தின் மீதான தயக்கம் காரணமாக, பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
தடுப்பூசி ஹராம்
இந்தோனேசியா, உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடுகளில் ஒன்றாகும். இஸ்லாத்தில் பன்றி ஹராம் என கருதப்படுகிறது.
தடுப்பூசியை பாதுகாப்பாகவும், நீண்ட நாட்களுக்கு பயனுள்ளதாகவும் வைத்திருக்கும் வகையில் அதில் ஜெலட்டின் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜெலட்டின் முதன்மையாக பன்றியின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டில் பன்றி கொழுப்பில் இருந்து தயாரிக்கப்பட்ட தடுப்பூசி ஹராம் என தீர்ப்பளித்த இந்தோனேசிய உலாமா கவுன்சில், சமூகத்தின் நலன் கருதி ஹலால் மாற்று கிடைக்கும் வரை இந்த தடுப்பூசியை பயன்படுத்த அறிவுறித்தியது.
இருந்தாலும், பல பெற்றோர்கள் ஹராம் எனக்கூறி தடுப்பூசியை ஏற்க மறுத்து வருகின்றனர்.
ஒரு சில பெற்றோர்கள், குழந்தையின் ஆரோக்கியத்திற்காக தயக்கத்தை மீறி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |