காஸாவில் களமிறங்கும் சர்வதேசப் படை... அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்ட தகவல்
ஐ.நா. அங்கீகரித்த சிறப்பு படையை உருவாக்கும் பொருட்டு அடுத்த மாத தொடக்கத்தில் சர்வதேச துருப்புக்கள் காஸாவில் களமிறங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நிராயுதபாணியாக்கும்
காஸாவில் உள்ள ஹமாஸ் படைகளை நிராயுதபாணியாக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் இதுவரை உறுதியான திட்டம் ஏதும் அமெரிக்கா தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

காஸாவில் களமிறங்கும் சர்வதேசப் படை ஹமாஸ் படைகளுடன் மோதலில் ஈடுபடாது. ஆனால், அவர்களை நிராயுதபாணியாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றே அமெரிக்க தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேசப் படையில் தங்கள் பங்களிப்பும் வேண்டும் என பல நாடுகள் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், எண்ணிக்கை, குடியிருப்பு, பயிற்சி, விதிகள் தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், காஸாவிற்கான சர்வதேசப் படையைத் திட்டமிடுவதற்காக, அமெரிக்க மத்திய கட்டளையகம், டிசம்பர் 16 அன்று தோஹாவில் நட்பு நாடுகளுடன் ஒரு முக்கிய சந்திப்பை நடத்தும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதில் 25க்கும் மேற்பட்ட நாடுகள் தங்கள் பிரதிநிதிகளை அனுப்ப உள்ளது. காஸா சிறப்புப் படையை வழிநடத்த அமெரிக்க இரண்டு நட்சத்திர தளபதி ஒருவர் பரிசீலிக்கப்பட்டு வருகிறார், ஆனால் எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்தின் முக்கிய பகுதியாக காஸாவில் படையை களமிறக்குவது அமைந்துள்ளது.

முதல் கட்டத்தில், இரண்டு வருட காலப் போருக்கு பிறகு பலவீனமான போர்நிறுத்தம் அக்டோபர் 10 அன்று தொடங்கியது, ஹமாஸ் படைகள் தங்கள் வசம் எஞ்சியிருந்த பணயக்கைதிகளை விடுவித்துள்ளது மற்றும் இஸ்ரேல் கைது செய்துள்ள பாலஸ்தீனியர்களை விடுவித்துள்ளது.
இஸ்ரேல் வசமிருக்கும் காஸா
இந்த நிலையில், மொத்தமாக உருக்குலைந்துள்ள காஸாவில் சுகாதாரம் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள 20,000 பேர்கள் கொண்ட ஒரு படையை அனுப்பத் தயாராக இருப்பதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
ஹமாஸ் படைகளால் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடத்தப்பட்டு வந்த காஸாவில் தற்போது 53 சதவீதப் பகுதியை இஸ்ரேல் இன்னும் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது, அதே நேரத்தில் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்களும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள மீதமுள்ள பகுதியில் வாழ்கின்றனர்.

இதனால், சர்வதேசப் படைகள் இஸ்ரேல் வசமிருக்கும் காஸா பகுதியில் களமிறங்கும் என்றே அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. சர்வதேசப் படை காஸாவை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும்போது இஸ்ரேல் இராணுவம் படிப்படியாக வெளியேறும்.
இதனிடையே, ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் மைக் வால்ட்ஸ் தெரிவிக்கையில், சர்வதேசப் படையானது காஸாவை அனைத்து வழிகளிலும் இராணுவமயமாக்காமல் இருக்க பாதுகாப்பு கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.
ஆனால் பாலஸ்தீன நாடு அமையாமல், ஆயுதங்களைக் கவிடுவதாக இல்லை என ஹமாஸ் படைகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |