நிறுத்துகிறோம்! ரஷ்யா வெளியிட்டுள்ள ஒரு முக்கிய அறிவிப்பு
ரஷ்யா சர்வதேச விண்வெளி நிலையத்தில் தனது ஒத்துழைப்பை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான தகவலை ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸின் தலைவர் டிமிட்ரி ரோகோசின் வெளியிட்டுள்ளார். இதன்மூலம் நாசா, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) மற்றும் கனட விண்வெளி நிறுவனம் (CSA) உடனான பங்களிப்பும் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்த டிமிட்ரி பதிவில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டாளிகள் மற்றும் பிற கூட்டு திட்டங்களுக்கு இடையிலான இயல்பான உறவுகளை மீட்டெடுப்பது என்பது, ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள சட்டவிரோத தடைகளை முழுமையாகவும், நிபந்தனையின்றியும் நீக்குவதன் மூலம் மட்டுமே சாத்தியமாகும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த நாசா, ரஷ்யா, கனடா, ஐரோப்பா மற்றும் ஜப்பானுடன் சர்வதேச விண்வெளி நிலையத்தை இயக்குவது தொடர்பான நடவடிக்கைகளில் சர்வதேச அரசுகளின் விண்வெளி ஒத்துழைப்பை அமெரிக்கா தொடர்ந்து ஆதரிக்கிறது.
புதிய மற்றும் தற்போதுள்ள அமெரிக்க ஏற்றுமதி கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் தொடர்ச்சியான பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதிப்படுத்த அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பை தொடர்ந்து அனுமதிக்கின்றன என கூறியிருக்கிறது.