இன்ஃபான்டினோவின் திட்டம்... சர்வதேச கிளர்ச்சிக்கு ஃபிஃபா பதிலடி
உலகக் கிண்ணம் பங்குகளை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் FIFA ஊடகங்கள் மீது அதிரடியான தாக்குதலை நடத்தியுள்ளது.
வாக்கெடுப்பை நடத்த ஃபிஃபா
FIFA நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அத்திட்டம் குறித்த தவறான செய்திகள், திட்டமிடப்பட்டிருந்த கலந்தாலோசனைச் செயல்முறையைப் பாதித்ததாக குற்றஞ்சாட்டியுள்ளது.

FIFA தலைவர் இன்ஃபான்டினோவின் திட்டம் தொடர்பில் கடும் எதிர்ப்புகள் இருந்தபோதிலும், விளையாட்டுத் துறையைச் சேர்ந்த டசின் கணக்கான சர்வதேச அமைப்புகளால் ஏற்கனவே கண்டிக்கப்பட்டுள்ள 'ஃபிஃபா ஃபார்வர்ட் என்டர்பிரைஸ்' (FFE) திட்டம் குறித்த வாக்கெடுப்பை நடத்த ஃபிஃபா (FIFA) தொடர்ந்து திட்டமிட்டு வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
ஊடகங்களால் திட்டமிட்டு வெளியிடப்பட்டத் தவறானத் தகவல்களால் நாங்கள் திட்டமிட்டிருந்த கலந்தாலோசனை செயல்முறைக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது என்றே FIFA நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், கால்பந்து தொடரை எவரும் விற்பனைக்கு வைக்கப்போவதில்லை என்றும், இதை ஃபிஃபா (FIFA) ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
ஃபிஃபா தலைவர் ஜியானி இன்ஃபான்டினோவின் திட்டத்தின் காரணமாக, எதிர்கால உலகக் கிண்ணம் போட்டிகளைப் புறக்கணிக்க ஐரோப்பிய நாடுகள் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஃபிஃபாவின் இந்த எதிர்வினை வந்துள்ளது.
FIFA ஃபார்வர்ட் எண்டர்பிரைஸ் (FFE) அமைப்பை நிறுவுவது தொடர்பான முன்மொழியப்பட்ட திட்டம் குறித்து அந்தந்த கூட்டமைப்புகள் வழங்கிய கருத்துக்களை நாங்கள் கேட்டறிந்தோம். மேலும், செவ்வாய்க்கிழமை வெளியான ஆரம்பகட்ட ஊடக அறிக்கைகளுக்குப் பிறகு எழுந்துள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண விரும்புகிறோம் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் உள்ள தலைமையகத்தில் இருந்து, வெள்ளிக்கிழமை அதிகாலையில் ஃபிஃபாவின் (FIFA) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்கால உலகக் கிண்ணம் போட்டிகளைப் புறக்கணிப்பதில் இங்கிலாந்தும் மற்ற 89 நாடுகளுடன் இணைந்ததால், பரவலாகக் கண்டிக்கப்பட்ட அந்த திட்டமானது உடனடியாகவே சீர்குலைந்தது.
FIFA போட்டிகளுக்காக 4 பில்லியன் டொலர் முதலீட்டைத் திரட்டும் நோக்கம் கொண்ட முன்மொழிவுக்கு, இங்கிலாந்தும் மற்ற 54 UEFA நாடுகளும் ஒருமனதாக ஒப்புக்கொண்டன.
106 உறுப்புச் சங்கங்களின் ஆதரவு
இந்த விவகாரத்தில் வட, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான CONCACAF-இல் உள்ள, FIFA-வில் பதிவுசெய்யப்பட்ட 35 நாடுகள் UEFA-விற்கு ஆதரவளித்தன. ஆனால், உலகக் கிண்ணம் தொடரைப் புறக்கணிப்பதாக மட்டும் அவர்கள் எச்சரிக்கை விடுக்கவில்லை.
மேலும், பெரும்பாலான உறுப்புச் சங்கங்கள் இன்ஃபான்டினோ தலைமையின் மீதான நம்பிக்கையை ஏற்கனவே இழந்துவிட்டன. இந்த முன்மொழிவை நிறைவேற்ற, இன்ஃபான்டினோவுக்கு 106 உறுப்புச் சங்கங்களின் ஆதரவு தேவைப்படும்.

தற்போது, ஃபிஃபாவின் (FIFA) 90 உறுப்பு அமைப்புகள் இத்திட்டங்களை வெளிப்படையாக எதிர்க்கின்றன. மேலும் 16 அமைப்புகள் எதிர்ப்புக் குரல் கொடுத்தால், இன்ஃபான்டினோவால் தனது திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்.
FFE திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தால், அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு உறுதியளிக்கப்பட்ட 10 மில்லியன் டொலர் அடிப்படை நிதியுதவி இரட்டிப்பாகி 20 மில்லியன் டொலராக உயரும் என்று இன்ஃபான்டினோ செவ்வாய்க்கிழமையன்று 211 உறுப்பினர் அமைப்புகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.
இதனிடையே, மொராக்கோவின் ரபாத் நகரில் அடுத்த மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 211 உறுப்பு நாடுகளின் தலைவர் தேர்தலுக்கான சாத்தியமான வேட்பாளர்களை அறிவிப்பதற்கு, ஃபிஃபா நவம்பர் 18-ஐ காலக்கெடுவாக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |