ஈரான் விதித்த 10 நிபந்தனைகள்... மறுப்பேச்சின்றி ஒப்புக்கொண்ட ட்ரம்ப்
ஈரான் விவகாரத்தில் இரண்டு வாரக் கால போர் நிறுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதை அடுத்து, அமெரிக்க இராணுவம் தாக்குதலை நிறுத்தும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
போரில் வெற்றி
பாகிஸ்தான் முன்மொழிந்துள்ள நிபந்தனைகளை ஏற்றுக்கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளதுடன், அமெரிக்காவும் இஸ்ரேலும் தங்களது தாக்குதல்களை நிறுத்தினால், ஈரானும் தனது தற்காப்பு நடவடிக்கையை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

மேலும், இரண்டு வார கால போர்நிறுத்தத்தின் போது, ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்வதை ஈரானிய இராணுவம் ஒருங்கிணைக்கும் என்றாலும், அந்தப் பாதையின் கட்டுப்பாட்டை ஈரானின் ஆயுதப் படைகளே தக்கவைத்துக் கொள்ளும் என்றும் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களுக்குப் பிறகு தொடங்கிய போரில் வெற்றி பெற்றதாக ஈரான் உரிமை கோரியதுடன், தடைகளை நீக்குவது மற்றும் தங்களது அணு ஆயுத செறிவூட்டலை ஏற்றுக்கொள்வது உள்ளிட்ட தனது 10 அம்சத் திட்டத்தை ஏற்குமாறு அமெரிக்காவை நிர்ப்பந்தித்ததாகவும் கூறியுள்ளது.
இந்த நிலையில் ஈரானின் உயர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர் நிறுத்தத் திட்டத்திற்கு ஹார்முஸ் நீரிணையின் மீதான ஈரானின் தொடர்ச்சியான கட்டுப்பாடு, செறிவூட்டலை ஏற்றுக்கொள்வது மற்றும் அனைத்து முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தடைகளையும் நீக்குவது உள்ளிட்டவை உட்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
10 நிபந்தனைகளும்
இது மட்டுமின்றி, மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்க இராணுவம் வெளியேறுதல், ஈரான் மற்றும் அதன் கூட்டாளிகள் மீதான தாக்குதல்கள் முடிவுக்கு வருதல், முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள் விடுவிக்கப்படுதல் மற்றும் எந்தவொரு ஒப்பந்தத்தையும் சட்டப்பூர்வமாக்கும் ஐ.நா. பாதுகாப்பு சபைத் தீர்மானம் ஆகியவையும் அந்த நிபந்தனைகளில் அடங்கும்.

மேலும், ஈரான் மீதான இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்னர் பொதுப்பயன்பாட்டில் இருந்துவந்த ஹார்முஸ் நீரிணை மீது ஈரானின் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துவதற்கு இது வழிவகுக்கிறது.
இந்த நிலையில், தமது ட்ரூத் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், ஈரான் முன்வைத்துள்ள 10 நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது என்றும், அது பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உகந்த ஒரு அடிப்படை என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கடந்த கால பேச்சுவார்த்தைகளின் பல்வேறு அம்சங்கள் அனைத்திற்கும் ஈரான் கிட்டத்தட்ட ஒப்புக்கொண்டுள்ளதாகவும், ஒரு நிரந்தர ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு இந்த கால நீட்டிப்பு அவகாசம் அளிக்கும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |