குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல் - வளைகுடா பகுதியில் பதற்றம் தீவிரம்
Iran Attacks Kuwait, Bahrain After US Airstrike: மத்திய கிழக்குப் பகுதியில் நிலவும் போர் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
குவைத், பஹ்ரைன் மீது ஈரான் தாக்குதல்
அமெரிக்கா ஈரானின் கெஷ்ம் (Qeshm) தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளத்தை தாக்கியதையடுத்து, ஈரான் தனது வளைகுடா அண்டை நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைன் மீது புதிய தாக்குதல்களை நடத்தியுள்ளது.
குவைத் அரசு வெளியிட்ட தகவலின்படி, ஈரான் அனுப்பிய ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) நாட்டின் வான்வெளிக்குள் நுழைய முயன்றன. இதையடுத்து குவைத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டு தாக்குதல்கள் தடுக்கப்பட்டன.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு குவைத் மீது நடைபெற்ற முதல் ட்ரோன் தாக்குதல் இதுவாகும்.
அதேபோல், அமெரிக்க கடற்படையின் 5வது கடற்படை தளம் அமைந்துள்ள பஹ்ரைனும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளானது. கடந்த 6 நாட்களில் பஹ்ரைன் மீது 4 முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ரேடார் நிலையம் மீது ஈரான் தாக்குதல்
இதற்கு முன்னர், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க ரேடார் நிலையம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறி, அதற்கு பதிலடியாகவே கெஷ்ம் தீவில் உள்ள ஏவுகணை ஏவுதளத்தை அமெரிக்கா தாக்கியதாக தெரிவித்துள்ளது. மறுபுறம், அமெரிக்காவின் ட்ரோன் கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் ஈரானின் தகவல் தொடர்பு கோபுரங்கள் மீது நடந்த தாக்குதல்களே தங்களின் நடவடிக்கைகளுக்குக் காரணம் என ஈரான் விளக்கம் அளித்துள்ளது.
இந்த புதிய மோதல்கள், கடந்த 9 மாதங்களாக நீடித்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போரின் தீவிரத்தை அதிகரித்துள்ளன. மேலும், கத்தார் முன்னெடுத்து வரும் சமாதான பேச்சுவார்த்தைகளும் இந்தச் சம்பவங்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைனுக்கு 45 பில்லியன் யூரோ கடன் வழங்க திட்டம் - உடனடியாக திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை
ஈரானின் தாக்குதல்களுக்கு சவூதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அரபு லீக் உள்ளிட்ட பல பிராந்திய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் பொதுச் செயலாளர் ஜாசெம் முகமது அல்-புதைவி, பிராந்திய பாதுகாப்பை பாதிக்கும் இந்த பதற்றத்திற்கு ஈரானே பொறுப்பு என கூறியுள்ளார்.
இதற்கிடையில், மத்திய கிழக்கிற்கு அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர் கப்பல் வந்துள்ள நிலையில், எதிரிகளின் நகர்வுகளை கவனித்து வருவதாக ஈரான் ராணுவத் தலைவர் அமீர் ஹதாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா ஏதேனும் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டால் அதற்கு கடுமையான பதிலடி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |