ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா
ஈரானுக்கு எதிரான போரில் தங்கள் இராணுவத் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என ஐரோப்பிய நாடான ஸ்பெயின் அறிவித்ததை அடுத்து தனது போர் விமானங்களை அமெரிக்கா வெளியேற்றியுள்ளது.
அமெரிக்க விமானங்கள்
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து, தெற்கு ஸ்பெயினில் உள்ள ரோட்டா மற்றும் மோரோன் இராணுவத் தளங்களில் இருந்து பதினைந்து அமெரிக்க விமானங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.

ஸ்பெயின் இறையாண்மையின் கீழ் உள்ள அதன் இராணுவத் தளங்களை ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பயன்படுத்த ஸ்பெயின் அனுமதிக்காது என்று வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ் கூறியதைத் தொடர்ந்தே அமெரிக்கா தனது போர் விமானங்களை வெளியேற்றியுள்ளது.
அமெரிக்காவும் ஸ்பெயினும் கூட்டாக இயங்கி வந்தாலும், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை ஸ்பெயின் கண்டித்துள்ளது. ஸ்பெயினில் இருந்து புறப்பட்ட விமானங்களில் குறைந்து 7 எண்ணம் ஜேர்மனியில் உள்ள ராம்ஸ்டீன் விமான தளத்தில் தரையிறங்கியது.
ஈரான் மீதான தாக்குதலுக்கு தங்களது தளங்களைப் பயன்படுத்த பிரித்தானியாவும் ஆரம்பத்தில் மறுத்துவிட்டது. ஆனால் கூட்டு தற்காப்புக்காக அவற்றைப் பயன்படுத்துவதற்கு ஞாயிற்றுக்கிழமை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அங்கீகாரம் அளித்தார்.
ஈரான் விவகாரத்தில் ஸ்பெயினின் நிலைப்பாடு, ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலிய நடவடிக்கைகளை பிரதமர் பெட்ரோ சான்செஸ் கடுமையாகக் கண்டித்தது உள்ளிட்டவை, அந்தப் பிராந்தியத்தில் மீண்டும் ஒருமுறை இது ஒரு விதிவிலக்கான விடயமாகவே பார்க்கப்படுகிறது.
டேங்கர் விமானங்கள்
இந்த நிலையில், அமைச்சர் அல்பரேஸ் தெரிவிக்கையில், ஈரான் மீதான இந்த நடவடிக்கைக்கு ஸ்பானிய தளங்கள் பயன்படுத்தப்படாது, மேலும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் சேர்க்கப்படாத எதற்கும் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு இணங்காத எதற்கும் ஸ்பானிய தளங்கள் பயன்படுத்தப்படாது என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஸ்பெயினின் பாதுகாப்பு அமைச்சர் மார்கரிற்றா ரோபிள்ஸ் தெரிவிக்கையில், வெளியேற்றப்பட்ட விமானங்கள் அனைத்தும் ஸ்பெயினில் நிரந்தரமாக நிறுத்தபப்ட்டிருந்தவை என்றும், அவை முதன்மையாக வான்வழி எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வெளியான தகவலின் அடிப்படையில், தெற்கு ஸ்பெயினில் உள்ள மோரோன் விமான தளத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஒன்பது டேங்கர்கள் புறப்பட்டு ஜேர்மனியை நோக்கிச் சென்றதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், விமானநிலையத்துடன் கூடிய கடற்படைத் தளமான ரோட்டாவிலிருந்து தெற்கு பிரான்ஸ் நோக்கி இரண்டு விமானங்கள் புறப்பட்டன. நான்கு விமானங்கள் ரோட்டாவிலிருந்து புறப்பட்டன, ஆனால் அவவை எந்தப் பகுதிக்கு சென்றுள்ளது என்பதில் உறுதியானத் தகவல் இல்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |