பல நாடுகளில் ஆயுத தொழிற்சாலைகள்... திகிலை ஏற்படுத்திய ஈரான்
ஈரான் பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழுற்சாலைகளை அமைத்துள்ளதாக அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே வெளியிட்டுள்ள கருத்து அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான இலக்கு
இஸ்ரேலுடன் மிக மோசமான வான்வழிப் போரில் ஈரான் ஈடுபட்ட சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே இதை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈரானிய செய்தி ஊடகம் ஒன்றில் அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே அளித்த நேர்காணலின் போதே அவர் இதை தெரிவித்துள்ளார். ஏவுகணைகளை உருவாக்குவதே ஈரானின் இராணுவத்தின் மிக முக்கியமான இலக்காக உள்ளது என தெரிவித்துள்ள நசீர்சாதே, இஸ்ரேலுடனான போருக்குப் பின்னர் முன்னுரிமைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.
மட்டுமின்றி, ஆயுத தொழிற்சாலைகள் தொடர்பில் குறிப்பிட்ட அவர், விரைவில் உத்தியோகப்பூர்வமாகத் திறந்து அறிவிக்கப்படும் என்றார். மேலும், ஜூன் மாதத்தில் 12 நாள் மோதல் இன்னும் கொஞ்ச நாள் நீடித்தால், இஸ்ரேலியப் படைகளால் ஈரானிய ஏவுகணைகளை இடைமறிக்க முடியாமல் போயிருக்கும் என்றார்.
இஸ்ரேலுடனான போர் 15 நாட்களைக் கடந்திருந்தால், அந்த நாடு திணறியிருக்கும் என்றார். இதனாலையே, அமெரிக்கா தலையிட வேண்டும் என இஸ்ரேல் கெஞ்சியதாகவும் அமைச்சர் அஜீஸ் நசீர்சாதே தெரிவித்துள்ளார்.
போரின் போது ஈரான் அதன் சமீபத்திய ஆயுதங்களில் ஒன்றான காசெம் பாசிர் ஏவுகணையைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தது என்றும், இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமடைந்திருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவப் பயிற்சி
ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையான காசெம் பாசிர், சுமார் 1,200 கிலோமீற்றர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. ஆகஸ்ட் 21 அன்று ஈரானின் கடற்படைப் பயிற்சிகளுடன் அமைச்சர் நசீர்சாதேவின் கருத்துக்கள் ஒத்துப்போனது,
ஈரான் படைகள் ஓமன் வளைகுடா மற்றும் வடக்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள மேற்பரப்பு இலக்குகளில் குரூஸ் ஏவுகணைகளை ஏவி சோதனை செய்தன. மட்டுமின்றி, இஸ்ரேலுடனான 12 நாள் போர் முடிவுக்கு வந்த பிறகு ஈரானின் முதல் இராணுவப் பயிற்சி இதுவாகும்.
1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் விதிக்கப்பட்ட பல தசாப்த கால அமெரிக்கத் தடைகள், ஈரானின் நவீன ஆயுதங்களை இறக்குமதி செய்யும் திறனைக் கட்டுப்படுத்தியுள்ளன, இதனால் உள்நாட்டு வளர்ச்சி மற்றும் காலாவதியான அமைப்புகளின் மேம்படுத்தல்களை நம்பியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |