மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்., ஒப்பந்த விதிகளை மீறிய அமெரிக்கா, இஸ்ரேல்
ஈரான் இராணுவம், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் மூடியதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் கையெழுத்தான ஒப்பந்தத்தின் முதல் விதியை அமெரிக்கா மீறியதாகவும், இஸ்ரேல் தொடர்ந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருவதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

ஈரான் இராணுவத்தின் காதம் அல்-அன்பியா தலைமையகம் வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்கா தனது உறுதிமொழிகளை மீறியுள்ளது. மேலும், இஸ்ரேல் தெற்கு லெபனானில் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துகிறது. இதனால் ஹார்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்துக்கு மூடப்படுகிறது” என தெரிவித்துள்ளது.
ஆனால், ஈரான் அறிவிப்பை அமெரிக்க மத்திய கட்டளை (Centcom) மறுத்துள்ளது. ஈரான் நீரிணையை கட்டுப்படுத்தவில்லை என்றும், அங்கு போக்குவரத்து தொடர்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்கப் படைகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஹார்முஸ் நீரிணை உலகளவில் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்திற்கு முக்கிய பாதையாகும். இதனை மூடுவதால் உலக பொருளாதாரத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் உள்ளன.
இதற்கு மத்தியில், பாகிஸ்தான் நடத்திய சமரச முயற்சியின் கீழ், அமெரிக்கா-ஈரான் இடையேயான தொழில்நுட்ப பேச்சுவார்த்தைகள் ஜூன் 21 அன்று ஜெனீவாவில் மீண்டும் தொடங்க உள்ளன.
இந்த சூழ்நிலையில், உலக சந்தைகளில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் அரசியல் பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |